பொது சிவில் சட்டத்துக்கு எதிராக நாகாலாந்து தீர்மானம்: பாஜக அதிர்ச்சி!
பொது சிவில் சட்டத்துக்கு எதிராக நாகாலாந்து சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
நாட்டில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சட்டம்தான் பொது சிவில் சட்டம். மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்கள், பரம்பரை விதிகள், தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றை மாற்றியமைத்து, நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான விரிவான சட்டங்களின் தொகுப்புத்தான் பொது சிவில் சட்டம் எனப்படுகிறது. இந்த பொது சிவில் சட்டம் மத்திய பாஜக அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்று.
பொது சிவில் சட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருப்பினும், 2024 தேர்தலுக்குள் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், பொது சிவில் சட்ட மசோதாவை ஆளும் பாஜக அரசு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த மசோதா இடம்பெறவில்லை.
இந்த நிலையில், பொது சிவில் சட்டத்துக்கு எதிராக நாகாலாந்து சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டால் மாநிலத்திற்கு விலக்கு அளிக்கவும் அத்தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை முதல்வர் நெய்பியு ரியோ கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக, அத்தீர்மானம் ஒருமனதாக நாகாலாந்து சட்டமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாகாலாந்தை ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, மத்திய பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இதனால், பாஜக அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாகா மரபுச் சட்டங்கள் மற்றும் சமூக, மத நடைமுறைகளுக்கு பொது சிவில் சட்டம் அச்சுறுத்தலாக அமையும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களைப் பெறும் புதிய நடைமுறையை சட்ட ஆணையம் அண்மையில் தொடங்கியது. அதற்கு பல்வேறு மாநிலங்கள் தங்களது கருத்துக்களை அனுப்பின. தமிழகத்தை பொறுத்தவரை பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கருத்து அனுப்பியது. அந்த வகையில், சட்ட ஆணையத்திடம் நாகாலாந்து மாநில அரசு எப்படி தனது கருத்துக்களை தெரிவித்தது என்பது குறித்தும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு பொது சிவில் சட்டத்துக்கு எதிராக மிசோரம், கேரளா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: அஜெண்டா என்ன?
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 12 பேர் கொண்ட நாகா குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு, கிறிஸ்தவ சமூகம் மற்றும் சில பழங்குடியினரை சட்டத்தில் இருந்து விலக்குவது குறித்து சட்ட ஆணையம் பரிசீலித்து வருவதாக அமித் ஷா உறுதியளித்ததாக தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, பொது சிவில் சட்டத்தில் இருந்து பழங்குடியினருக்கு மத்திய அரசு விலக்களிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், பொது சிவில் சட்டத்துக்கு எதிராக நாகாலாந்து சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.