Muthukrishnan body in native
முத்துகிருஷ்ணன் உடலுக்கு பொன்னார் அஞ்சலி… மாணவர்கள் எதிர்ப்பால் பரபரப்பு…
டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட சேலம் மாணவர் முத்து கிருஷ்ணன் உடல் அவரது சொந்த ஊரான சாமிநாதபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் டெல்லி ஜே.என்.யு பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறையில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், அவர் திடீரென விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், தனது மகன் கோழையில்லை என்றும், தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் மாணவரின் தந்தை டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, டெல்லி AIIMS மருத்தவமனையில், முத்துகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை அதிகாரி, மாணவர் முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு தற்கொலைதான் காரணம் என்று தெரிவித்தார்.

அவரது உடலில் காயம் எதுவும் காணப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்கொலை செய்த கொண்ட முத்து கிருஷ்ணனின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அங்கு மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், முத்துகிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் உடல் சொந்த ஊரான சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது . அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக முத்துணிருஷ்ணன் உடல் வைக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகலுக்குள் முத்துகிருஷ்ணன் உடல் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
