இந்து தம்பதிக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சிகர சம்பவம் கேரள மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது

நாடு முழுவதும் வெறுப்புணர்வு, வகுப்புவாதத்தை தூண்டும் பல சம்பவங்கள் நடந்தாலும் மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான சாட்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்து - முஸ்லிம் உறவு குறித்து கேரள மாநிலத்தில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் காட்டப்படுகின்றன. ஆனால், நாங்கள் அப்படி அல்ல எங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கிறோம் என சேட்டன்கள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர்.

அந்த வகையில், கேரளாவின் மதச்சார்பற்ற அங்கீகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் மற்றொரு நிகழ்வு மலப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. அம்மாவட்டத்தில் இந்து ஜோடியின் திருமணத்தை இந்து கோயிலில் வைத்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சினர் நடத்தி வைத்துள்ளனர்.

மலப்புரம் மாவட்டம் ஸ்ரீஅம்மஞ்சேரிக்காவு பகவதி அம்மன் கோயிலில் கீதா - விஷ்ணு ஜோடியின் திருமணமானது வெங்கரா ஊராட்சி 12ஆவது வார்டு இந்திய யூனியன் முஸ்லிம் இளைஞர் லீக் கமிட்டியினரின் ஏற்பாட்டின் பேரில் இனிதே நடந்து முடிந்துள்ளது.

வெங்கரா நகரின் மானாட்டிபரம்பில், ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கான தற்காலிக தங்குமிடமாக ரோஸ் மேனர் செயல்பட்டு வருகிறது. இங்கு வசித்து வந்தவர்தான் கீதா. இவருக்கும் விஷ்னுவுக்கும்தான் ஸ்ரீஅம்மஞ்சேரிக்காவு பகவதி அம்மன் கோயிலில் திருமணம் நடந்துள்ளது. ஆதரவற்ற கீதாவின் திருமணத்தை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் முன்னின்று நடத்தி வைத்துள்ளனர்.

முஸ்லீம் பெண்கள் பொது சிவில் சட்டம் பற்றி என்ன நினைக்கின்றனர்? வெளியானது மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள்

இந்த திருமணத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொது செயலாளரும், வெங்காரா சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பி.கே. குஞ்சாலிக்குட்டி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநிலத் தலைவர் சயீது சாதிக் அலி ஷிஹாப் தங்கல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு கேரள மண்ணின் மதசார்பற்ற தன்மையை நிரூபிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலப்புரம் மாவட்ட செயலாளர் இ.எம். மோகன்தாஸ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஎஸ் ஜாய் உள்ளிடோரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு குறித்து, “இன்று ஒரு இனிமையான நாள். எனது மண்ணின் ஒற்றுமையும் களங்கமற்ற தோழமையும் இன்று கோவில் முற்றத்தில் சாட்சியாக இருந்தது.” என பி.கே. குஞ்சாலிக்குட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டும் இதேபோன்று ரோஸ் மேனர் வாசியான பெண் ஒருவருக்கு வெங்காராவில் வைத்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் திருமணம் நடத்தி வைத்துள்ளனர். எனவே, இந்த முறை முஸ்லிம் இளைஞர் லீக் கமிட்டியினர் கோயில் நிர்வாகத்தை அணுகிய போது, எவ்வித தயக்கமும் இல்லாமல் கோயில் நிர்வாகம் ஒப்புக் கொண்டது. கீதா - விஷ்ணு திருமணத்தை கோயில் பூசாரி ஆனந்த் நம்பூதிரி நடத்தி வைத்தார்.