mumbai terror attack 9th memorial day

நாட்டையே உலுக்கிய மும்பையில் 164 பேரை கொன்று குவித்த பயங்கரவாதத் தாக்குதலின் 9-ம் ஆண்டு நினைவுதினம் இன்று..

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் மும்பைக்குள் நுழைந்தனர். மும்பை தாஜ் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், நாரிமன் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்கள் தாக்குதல் நடத்தினர்.

பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி மக்கள், காவல் துறையினர் மற்றும் வெளிநாட்டவர்கள் என 164 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்திய வரலாற்றில் மிகக்கொடூரமான பயங்கரவாத தாக்குதலாக அறியப்படும் மும்பை தாக்குதலின் 9-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சையதை, அண்மையில் வீட்டுக்காவலில் இருந்து பாகிஸ்தான் விடுவித்தது.

ஹஃபீஸ் சையதை வீட்டுக்காவலில் இருந்து விடுவித்ததற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. மும்பை தாக்குதலின் நினைவு தினமான இன்று, அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானுடன் சுமூக உறவையே அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.