மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த பலத்த மழையின்போது வெள்ளத்தில் சிக்கிய மாணவர்களை பள்ளி பேருந்து ஓட்டுநர்  பாய்ந்து சென்று காப்பாற்றினார். ஆனால் அதே வெள்ளத்தில் டிரைவர் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

வட மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை  வெளுத்து வாங்கி வருகிறது.  குறிப்பாக மகாராஷ்ராவில்  கடந்த 10 நாட்களாக கனமழை  கொட்டி வருகிறது. மும்பை, பால்கர் உள்ளிட்ட நகரங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் அங்கு நேற்று காலை மழை சற்று ஓய்ந்த நிலையில்  இன்று  வழக்கம் போல் பள்ளிகள் இயங்கின.

ஆனால் பிற்பகலில் மீண்டும் தொடங்கிய மழை, மாலை வரை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் கூட செல்ல முடியாதபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது.

மாலை பள்ளிகள் விட்டதும் குழந்தைகள் வழக்கம் போல் பள்ளிப் பேருந்துகளில் வீடு திருப்பிக் கொண்டிருந்தனர். பால்கர் நகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இருந்து குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பேருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அந்தப் பேருந்து  மழை வெள்ளத்தில் சிக்கியது.

பிரகாஷ் என்பவர் அந்தப் பேருந்தை  ஓட்டி வந்தார். பல குழந்தைகளை அவரவர் வீடு அருகே அவர் பத்திரமாக கொண்டு சேர்த்தார். ஒரு சில குழந்தைகளை மட்டும் இன்னமும் வீடுகளில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அப்போது சாலையில் அதிகமாக தேங்கிய தண்ணீரில் பேருந்து சிக்கி கொண்டது.

பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட அந்த இடத்தில் இருந்து வெகு அருகாமையில் இரண்டு மாணவர்களின் வீடு உள்ளது. இதையடுத்து அந்த மாணவர்களை பேருந்தில் இருந்து பத்திரமாக பிரகாஷ் இறக்கி விட்டார்.

ஆனால் கொஞ்ச தூரம் நடந்த அந்த மாணவர்கள் குழி ஒன்றில் சிக்கிக் கொண்டனர். அதைப் பார்த்த டிரைவர் பிரகாஷ், உடனடியாக வெள்ளத்தில் குதித்து அந்த இரண்டு மாணவர்களையும்  மீட்டு மேடான பகுதிக்கு கொண்டு வந்து சேர்த்தார்.

ஆனால் வெள்ளத்தில் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறிய பிரகாஷை வெள்ளம் இழுத்துச் சென்றது. வெள்ள நீரின் வேகம்  அதிகமாக இருந்ததால் அருகே இருந்த கால்வாயில் உருண்டு விழுந்து அவர் அடித்துச் செல்லப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீண்ட நேரத்திற்கு பிறகு அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தனது பேருந்தில் பயணம் செய்யும் குழந்தைகளை காப்பாற்றச் சென்று உயிரை விட்ட ஓட்டுநர் பிரகாஷின் தியாகத்தை, பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.