மும்பையில் இதுவரை சுமார் 250 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில்  52,952  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,783ஆக உள்ளது. இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கையில் மகாராஷ்ரா முதலிடத்தில் இருந்து வருகிறது. 2வது இடத்தில் குஜராத், 3வது இடத்தில் டெல்லி, 4வது இடத்தில் தமிழ்நாடு இருந்து வருகிறது. மகாராஷ்ராவில் இதுவரை 16, 758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 651 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதற்கிடையில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், சில தளர்வுகள் செய்யப்பட்டாலும் ஊரடங்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு அவ்வப்போது இடையூறு அளிக்கும் விதமாக மக்கள் ஊரடங்கை கடைபிடிக்காமல் உத்தரவை மீறி வருகின்றனர்.

 இவ்வாறு உத்தரவை மீறும் மக்களுக்கு போலீசார் தகுந்த தண்டனை வழங்கி வருகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் பரவியவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவத்துறையினருக்கும் போலீசார் பாதுகாப்பு உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகளின் போது கொரோனா நோயாளிகளிடமிருந்து மருத்துவ ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், 55 வயதுக்கு மேற்பட்ட போலீசார் விடுப்பில் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டது. 

இந்நிலையில், மும்பையில் இதுவரை சுமார் 250 போலீசாருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது என காவல் ஆணையர் பரம்பீர் சிங் தகவல் தெரிவித்துள்ளார். நோய் தொற்றுக்கு ஆளானோர்களில் குறிப்பட்ட சிலருக்கு மட்டுமே நோயின் அறிகுறி இருப்பதாக கூறியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்கள் யாரும் தீவிர நோய்த்தடுப்பு பிரிவில் இல்லை என காவல் ஆணையர் பரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.