தேடப்படும் குற்றவாளியாக இஸ்லாமிய மத போதகர் ஜாகிர்நாயக்கை அறிவித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்காளதேச தலைநகர் டாக்காவில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வெளிநாட்டினர் தங்கி இருந்த ஒரு ஓட்டல் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இந்திய மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகளில் ஒருவரன ரோஹன் இம்தியாஸ் என்பவர் மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார். ஜாகிர் நாயக்கின் பேச்சால்தான் ரோஹன் தீவிரவாத செயலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, ஜாகிர் நாயக் நடத்தி வரும் சர்ச்சைக்குரிய, 'பீஸ் டிவி' சேனலுக்கு, வங்கதேச அரசு தடை விதித்தது. கடும் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து ஜாகிர் நாயக் நாட்டை விட்டு வெளியேறினார். ஓராண்டு கடந்த பின்னரும் அவர் நாட்டுக்கு திரும்பவில்லை. .ஜாகிர் நாயக், மலேசியா ,சவுதி அரேபியா நாடுகளின் குடியுரிமை பெற்றதாகவும் செய்திகள் வெளியாயின. இந்த நிலையில், ஜாகீர் நாயக் தேசியப் புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

அதற்கு முன்பாக ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை சட்ட விரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்தது. நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வரும் நிலையில், சம்மன் அனுப்பியும் ஜாகிர் நாயக் ஆஜராகாமல் இருந்தார். இந்த நிலையில் தேடப்படும் குற்றவாளியாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தால் நேற்று முன்தினம் ஜாகிர் நாயக் அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஜாகிர் நாயக்கின் சொத்துகளை முடக்கும் பணியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.