மும்பையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 45-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டம் திரிம்பக்கேஷ்வர் அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றிக்கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக சென்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 45-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

தகவல் அறிந்து அங்கு வந்த மீட்பு குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 15-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்கள் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் அதிவேக பேருந்து இயக்கியதே விபத்து காரணம் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன் கட்ஜிரோலி அருகே, லாரி -பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.