மும்பையில்  பெய்துவந்த கன மழையால் 5 மாடி கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24  ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மும்பையை கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக  கடந்த 29-ந் தேதி மும்பையில் பேய் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மும்பை பெருநகரம் வெள்ளத்தில் மிதந்தது.

இந்த நிலையில், தென்மும்பை பெண்டி பஜார் மவுலானா சவுகத் அலி சாலையில் ‘ஹூசைன் வாலா மன்சில்’ என்ற 5 மாடிகள் கொண்ட 117 ஆண்டுகள்  பழமை வாய்ந்த கட்டிடம் இருந்தது.


இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் 6 குடோன்கள் இருந்தன. முதல் மாடியில் தனியார் மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. மற்ற மாடிகளில் உள்ள வீடுகளில் 12 குடும்பத்தினர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

உயர்ந்து நின்ற இந்த கட்டிடம் நேற்று காலை 8.35 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. மாடிகள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்தன. அப்போது அந்த பகுதியே பூகம்பம் வந்தது போல் அதிர்ந்தது. கண்இமைக்கும் நேரத்தில் நிமிர்ந்து நின்ற கட்டிடம் தரைமட்டமானது.

இந்த பயங்கர கட்டிட விபத்தில், கட்டிடத்தில் வசித்து வந்த குடியிருப்புவாசிகள் பலர் சிக்கிக்கொண்டார்கள்.

.இது குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் 37 பேர் மீட்கப்பட்டார்கள். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள். இவர்களில் 5 பெண்கள் உள்பட 24 பேர்  உயிரிழந்தனர்.

மேலும் 13 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.