மும்பையில் போதையில் நடுரோட்டில் சண்டை போட்ட பெண்களை கைது செய்ய முயன்ற போலீசுக்கு, அறை விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பையாந்தர் பகுதியில், பார் ஒன்றில் மது அருந்திய 4 இளம்பெண்கள், நடுரோட்டில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை வேடிக்கை பார்த்த பொதுமக்களை பார்த்து ஆபாசமாகப் பேசியதுடன், மிரட்டலும் விடுத்துள்ளனர்.

 

பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மதுபோதையில் நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த இளம்பெண்கள் 4 பேரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்ப முயற்சி செய்தனர். ஆனால் மது போதையின் உச்சியில் இருந்த இளம் பெண்கள் நால்வரில் ஒருவர், போலீஸார் என்றும் பாராமல் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மென்மையாக சமாதானப் படுத்திக் கொண்டிருந்த காவலர் ஒருவரின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.

இதைப் பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், அங்கு வந்த பெண் போலீஸார் போதையில் தள்ளாடிய இளம்பெண்களை கைது செய்தனர். ஆனால் அவர்களுடன் கடும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட இளம் பெண்கள் நான்கு பேரும், அவர்களையும் ஆபாசமாக திட்டியதோடு வேனில் ஏறுவதற்கு மறுப்பு தெரிவித்தனர். 

இதனால் வேறு வழியில்லாமல் லத்தியை எடுத்து சுழற்றிய பெண் காவலர் ஒருவர், போதையில் இருந்த நான்கு பெண்களையும் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நான்கு பேரும் மும்பையில் உள்ள கால் சென்டரில் வேலை பார்ப்பவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் ஒருவர் கமலா ஸ்ரீவத்சவா, மம்தா ஐயர், அலிஷா பிள்ளை ஆகியோர் என்பது தெரிந்த நிலையில்,  வேனில் ஏற்றிய சிறிது நேரத்தில் தப்பியோடிய மற்றொரு இளம் பெண் குறித்து விசாரித்து வருகின்றனர்.