தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த உயரம் 152 அடியாகும்.  ஆனால் கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 136 அடிக்கு மேல் அதில் தண்ணிர் தேக்க முடியாது. இதனை எதிர்ந்து ஜெயலலிதா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த சட்டப் போராட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை  142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இது தமிழகத்துக்குகிடைத்த மிகப் பெரிய வெற்றியாக கருதப்பட்டது. .

இதையடுத்து  கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலும், 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.

இந்நிலையில் தற்போது கேரளாவில் தீவிரம் அடைந்துள்ள பருவமழையும் கை கொடுத்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் காலை அணையின் நீர்மட்டம் 136.10 அடியாக இருந்தது. தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்ததால் நேற்று பிற்பகல் 12.50 மணியளவில் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதையடுத்து இடுக்கி மாவட்டத்துக்கு இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு 2014-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு பிறகு 3-வது முறையாக நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிக அளவில் இருந்ததால் நேற்று இரவு அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப் பட்டது. இதனால் அடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாற்று கரையோர மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.