கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் குறித்து ஆலோசனை நடத்த முல்லைப்பெரியாறு கண்காணிப்பு கூட்டத்தை நாளையே கூட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

முன்னதாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அணையின் உறுதி தன்மை குறித்து கேரள மக்களுக்கிடையே பீதி நிலவி வருகிறது. 

ஆகையால் அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 136 அடியாக குறைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் அணை பாதுகாப்பாக இருப்பதால் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என தெரிவித்தார். இந்நிலையில் கேரளாவில் வெள்ள நிலைமை மோசமாக இருப்பதால், நீர் மட்ட அளவை 143 அடியில் இருந்து குறைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் இடுக்கியை சேர்ந்த ரசூல் ராயின் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை அவசர வழக்காக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்றே விசாரித்தனர். 

அப்போது, முல்லைப் பெரியாறு அணை நீர் இருப்பு, நீர் மேலாண்மை தொடர்பாக நாளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட மத்திய அரசுக்கு நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பி்த்தனர். மேலும் அணையின் நீர்தேக்க அளவை குறைப்பது பற்றி ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இது தொடர்பான வழக்கை நாளை ஒத்திவைத்தனர்.