Asianet News TamilAsianet News Tamil

முலாயம்சிங்கை சந்தித்தார், அகிலேஷ் யாதவ் - தந்தையுடன் மகன் சமரச முயற்சி

mulayam singh yadav meet akilesh yadav
mulayam singh yadav meet akilesh yadav
Author
First Published Sep 28, 2017, 9:19 PM IST


சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், அவருடைய தந்தை முலாயம்சிங்கை சந்தித்து, கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். பிளவு பட்ட கட்சியில், அகிலேஷின் சமரச முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

77 வயதான முலாயம்சிங் யாதவின் மகனான அகிலேஷ் யாதவ், உ.பி. மாநில முதல்-அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக முலாயம்சிங் யாதவ் குடும்ப மோதல் உச்ச கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, ஆட்சி பொறுப்புடன் கட்சித் தலைமை பொறுப்பையும் அகிலேஷ் யாதவ் கைப்பற்றிக் கொண்டார்.

கடந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்த அகிலேஷ் படுதோல்வி அடைந்தாலும், சமாஜ்வாதி கட்சியில் பிளவு நீடித்து வந்தது. முலாயம்சிங் மற்றும் அவருடைய தம்பி சிவபால் யாதவ் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் வெள்ளி விழா மாநாட்டிற்கு கூட அவர்கள் அழைக்கப்படவில்லை.

இந்த நிலையில், முலாம்சிங் புதிய கட்சி தொடங்குவார் என்றும், இதற்கான அறிவிப்பு கடந்த திங்கள் அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது பெயரளவில் செயல்பட்டுவரும் லோக்தளம் கட்சி பெயரில் செயல்படுவது என முலாயம்சிங் அறிவிப்பார் என தகவல் வெளியானது.

ஆனால், திங்கட் கிழமை அன்று நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பின்போது, தற்போதைக்கு புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என முலாயம் அறிவித்தார். மகன் என்ற முறையில் அகிலேஷுக்கு தனது ஆசி என்றும் உண்டு என்றும் அவர் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கட்சி பிளவுபட்டு பல மாதங்களுக்குப்பிறகு, அகிலேஷ் யாதவ் தந்தையுடன் சமரச முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். நேற்று அவர் முலாயம்சிங் வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்து பேசினார்.

இந்த தகவலை தெரிவித்த சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.சி.யான சுனில்சிங் யாதவ், இந்த சந்திப்பு குறித்து மேற்கொண்டு விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.

ஆக்ராவில் வருகிற 5-ந்தேதி நடைபெற இருக்கும் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி முலாயமுக்கு அகிலேஷ் அழைப்பு விடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், 5-ந்தேதி நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்திற்குப்பின்தான் இந்த சமரச முயற்சி தொடருமா? அல்லது முலாயம் மீண்டும் தனிக்கட்சி தொடங்குவாரா? என்பது தெரியவரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios