சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் வீட்டுக்கு திடீர் ரெய்டு சென்ற மின்சார வாரிய அதிகாரிகள், அவர் ரூ. 4 லட்சம் மின்கட்டணம் செலுத்தாமல் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அடுத்த ஒரு மாதத்துக்குள் கட்டணத்தை செலுத்த உத்தரவிட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் தற்போது பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்து, நஷ்டம் ஏற்படக் காரணத்தை கண்டறிந்து சரிசெய்துவரும் ஆத்தியநாத், பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தங்களையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம்சிங் வீடு இட்டாவா நகரில் உள்ளது. இவர் வீட்டுக்கு ஒதுக்கப்பட்ட அளவு மின்சாரத்தைக் காட்டிலும் அதிகமாக பயன்படுத்தி வருவதாக மின்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இவரின் வீட்டுக்கு மாதம் ஒன்றுக்கு 5 கிலோவாட் மின்சாரம் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது, ஆனால், அதைக்காட்டிலும், 8 மடங்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து, மின்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக முலாயம்சிங் வீட்டில் ரெய்டு நடத்தினர். அப்போது, 12-க்கும் மேற்பட்ட சொகுசு தங்கும் அறைகள், மாடிக்கு செல்ல எஸ்கலேட்டர், தானாக வெப்பநிலையை சரிசெய்யும்வசதி கொண்ட நீச்சல் குளம், வீடு முழுமைக்கும் குளிர்சாதன வசதி எனஇருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்தின் அளவுக்கு கட்டணமான ரூ. 4 லட்சம் ரூபாயை அடுத்த ஒரு மாதத்துக்குள் செலுத்த வேண்டும் என முலாயம்சிங்கிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த திடீர் சோதனை குறித்து மின்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ புதிதாக வந்துள்ள முதல்வர் ஆதித்யநாத், வி.ஐ.பி. கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதன் ஒருபகுதியாக முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்களின் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரத்தின் அளவை சரிபார்த்தல், மின் திருட்டு நடக்கிறதா, மின் கட்டண பாக்கி இருக்கிறதா என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனால், இந்த ரெய்டு நடத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.