ஜி20 தலைவர்களுக்கு இரவு விருந்து: அம்பானி, ஆதானிக்கு அழைப்பு!
ஜி20 தலைவர்களுக்கு அளிக்கப்படவுள்ள இரவு விருந்தில் கலந்து கொள்ள இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக தனது நிலையை இந்தியா வெளிப்படுத்தி வருவதற்கிடையே ஜி20 தலைமையை இந்தியா ஏற்றுள்ளது. இதில், கலந்து கொள்ளவுள்ள உலகத் தலைவரகளுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கவும், இந்தியாவின் செழுமைமிக்க கலாசாரத்தை அவர்களுக்கு காட்டவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
செப்டம்பர் 9.10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டின் முதன்மை அமர்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பலர் இந்தியா வரவுள்ளனர். அவர்கள் உள்பட ஜி20 தலைவர்கள், பிரதிநிதிகள் தங்குவதற்கு டெல்லியில் உள்ள சொகுசு ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 பிரதிநிதிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பு பிரபல ஐடிசி ஹோட்டலிடம் வழங்கப்பட்டுள்ளது. அதுதவிர, இந்திய அரசு சார்பில், சனிக்கிழமையன்று ஜி20 தலைவர்களுக்கு விருந்து வழங்கப்படவுள்ளது.
ஜி20 தலைவர்களுக்கு அளிக்கப்படவுள்ள இந்த இரவு விருந்தில் கலந்து கொள்ள முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்ட இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜி20 விருந்தினர்களுக்கு உணவு பரிமாற தங்கம், வெள்ளி தட்டு!
உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக தனது நிலையை இந்தியா வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்திய தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சீனாவின் பொருளாதாரம் மந்தமடைந்து வரும் நிலையில், வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான இடமாக இந்தியாவை மேம்படுத்தவும், உலகின் சக்திவாய்ந்த பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவை முன்னிறுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி முயன்று வருகிறார்.
முகேஷ் அம்பானி, கவுதம் அதானி தவிர டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், குமார் மங்கலம் பிர்லா, பார்தி ஏர்டெல் நிறுவனர்-தலைவர் சுனில் மிட்டல் உள்ளிட்ட சுமார் 500 தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் ஆகியோர் கலந்து கொள்ளாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.