மத்தியபிரதேச மாநிலம் கார்கோனில் ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று ராம நவமி ஊர்வலத்தின் போது கல் வீச்சு நடத்தப்பட்டது குறித்து தகவல் கொடுத்தால் 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என மத்திய பிரதேச காவல்துறை அறிவித்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் கார்கோனில் ராம நவமி ஊர்வலத்தின் போது கல் வீச்சு நடத்தப்பட்டது குறித்து தகவல் கொடுத்தால் 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என மத்திய பிரதேச காவல்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ராம நவமி கடந்த 10 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மத்தியப்பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலங்கள் நடைபெற்றன. அதில் மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் நடைபெற்ற ஊர்வலம் கலவரமாக மாறியது. வேறொரு சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் ஊர்வலம் சென்ற போது ஒலிப்பெருக்கிகளை சத்தமாக இசைப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஊர்வலம் பாதியிலேயே தடைபட்டு இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் வாகனங்களுக்கு தீ வைப்பு, கல் வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறின. தீவைக்கப்பட்டதில் 4 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனையடுத்து, அப்பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலம் கார்கோனில் ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று ராம நவமி ஊர்வலத்தின் போது கல் வீச்சு நடத்தப்பட்டது குறித்து தகவல் கொடுத்தால் 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என மத்திய பிரதேச காவல்துறை அறிவித்துள்ளது. ராம நவமி ஊர்வலத்தின் போது நடத்தப்பட்ட கல் வீச்சில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். மேலும் கல் வீச்சு காரணமாக பல பேர் காயமடைந்தனர். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகி உள்ளனர். இதை அடுத்து சம்பவ இடத்தில் இருந்த வீடியோ காட்சிகள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களால் சில நபர்களின் பெயர்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை சுமார் 106 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கார்கோன் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக மத்தியப் பிரதேச அரசு ரூ.1 கோடியை நிவாரணத் தொகையாக ஒதுக்கீடு செய்தது. இதற்கிடையே, ராம நவமி ஊர்வலத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர்களுக்கு சொந்தமான சட்டவிரோத கட்டிடங்களை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இடித்து தள்ளியது. அதிகாரிகள் சுமார் 45 வீடுகள் மற்றும் கடைகள் மீது புல்டோசர் ஏற்றி இடித்தனர். அவ்வாறு 16 வீடுகள் மற்றும் 29 கடைகள் இடிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு மத்தியப் பிரதேச போலீசார் வெகுமதியை அறிவித்துள்ளனர். கார்கோன் வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தலா ரூ.10,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
