மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவின் வாகன காண்வாயில் இருந்த வாகனங்கள் பழுதடைந்து இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் வெள்ளிக் கிழமை ரத்லம் மாவட்டத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வியாழக்கிழமை தனது காண்வாய் வாகனத்தில் சென்ற நிலையில் அருகில் இருந்த பெட்ரோல் நிலையம் ஒன்றில் காருக்கு டீசல் நிறப்பப்பட்டதாக PTI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தூரிலிருந்து வந்த வாகனங்கள், ரத்லமில் எரிபொருள் நிரப்பிய சிறிது நேரத்திலேயே பழுதடைந்தன, அதைத் தொடர்ந்து அவை இழுத்துச் செல்லப்பட்டன. சம்பவத்தின் வீடியோவில், ஓட்டுநர்கள் மற்றும் பெட்ரோல் பம்ப் ஊழியர்கள் SUVகளை தள்ளிச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

வாகனம் பழுதடைந்ததற்கு தண்ணீர் கலக்கப்பட்ட டீசலை நிறப்பியதே காரணம் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், எரிபொருள் கலப்படம் காரணமாக பெட்ரோல் பம்ப் சீல் வைக்கப்பட்டது. வாகனங்கள் இந்தூரிலிருந்து ரத்லம் நோக்கி வந்து கொண்டிருந்ததாகவும், எரிபொருள் நிரப்புவதற்காக பெட்ரோல் பம்பில் நிறுத்தப்பட்டதாகவும் ஓட்டுநர் ஒருவர் தெரிவித்தார்.

"நாங்கள் டேங்கில் டீசல் நிரப்பினோம். சில வாகனங்கள் எரிபொருள் நிரப்பிய பிறகு வெளியேறி 1 கி.மீ. பயணம் செய்த பிறகு பழுதடைந்தன, மற்றவை இங்கேயே பழுதடைந்தன," என்று ஓட்டுநர் கூறினார். உணவு மற்றும் குடிமை வழங்கல் துறை எரிபொருளின் மாதிரிகளைச் சேகரித்து, பின்னர் டீசலில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியதாக NDTV அறிக்கை தெரிவித்துள்ளது. இதனிடையே முதல்வர் மாற்று வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.