கொரோனா பரவுதல் அதிகரிக்க தப்லீக் ஜமாத்தாரே காரணம்..! ம.பி முதல்வர் அதிரடி குற்றச்சாட்டு..!
கொரோனா நோய்த் தொற்று பரவியதற்கு, தப்லீக் ஜமாத் உறுப்பினா்களே காரணம். டெல்லி மாநாட்டிலிருந்து மாநிலத்தின் முக்கிய நகரங்களான இந்தூா், போபால் நகரங்களுக்குத் திரும்பிய அவா்கள், அங்குள்ள மக்களுக்கும் நோய்த் தொற்றைப் பரப்பினா். அதோடு, அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரமறுத்த அவா்களின் பொறுப்பற்ற செயலால், நேரடியாகவும் மறைமுகமாகவும் பலருக்கு நோய்த் தொற்று பரவ காரணமாக அமைந்தனா்.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை உருவாக்கி இருக்கும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இன்றைய நிலவரப்படி நாட்டில் 131,423 மக்கள் பாதிக்கப்பட்டு 3,868 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மத்திய பிரதேசம் விளங்குகிறது. அங்கு தற்போது வரை 6,170 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கும் நிலையில் 272 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க தப்லீக் ஜமாத் உறுப்பினர்களே காரணம் என முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: மத்திய பிரதேசத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவியதற்கு, தப்லீக் ஜமாத் உறுப்பினா்களே காரணம். டெல்லி மாநாட்டிலிருந்து மாநிலத்தின் முக்கிய நகரங்களான இந்தூா், போபால் நகரங்களுக்குத் திரும்பிய அவா்கள், அங்குள்ள மக்களுக்கும் நோய்த் தொற்றைப் பரப்பினா். அதோடு, அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரமறுத்த அவா்களின் பொறுப்பற்ற செயலால், நேரடியாகவும் மறைமுகமாகவும் பலருக்கு நோய்த் தொற்று பரவ காரணமாக அமைந்தனா். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இந்த இரண்டு நகரங்களும் சிறப்பு கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்தூா், போபால் மற்றும் உஜ்ஜைனி நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 1,500-க்கும் அதிகமானோா் குணமடைந்து, நலமுடன் உள்ளனா்.
அவசரநிலை ஏற்பட்டால் சமாளிக்கும் வகையில், இந்த மண்டலங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும், சுகாதார மையங்களும் முழு வசதிகளுடன் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பணியாளா்களைத் தாக்குபவா்கள் இனி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவா். அந்த சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் மத்திய பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசும், இதுபோன்று தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய நேரத்தில் அரசு மீது குறை கூறுவதிலேயே காங்கிரஸ் கட்சி முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறது. மாநிலத்தின் முதல்வராக நான் பதவியேற்றபோது, மிகக் குறைந்த அளவிலான மருத்துவ வசதிகளே மாநிலத்தில் இருந்த நிலையில் அதை இப்போது பல மடங்கு மேம்படுத்தியிருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.