மத்திய பிரதேச காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக கொண்டு வந்தால், அதை சந்திக்க தயார் என மாநில முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார். 
கடந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேச சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளைப் பிடித்தது. பாஜக 109 தொகுதிகளில் வென்றது. மெஜாரிட்டிக்கு இரு இடங்கள் குறைவாக இருந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி வென்ற 2 உறுப்பினர்கள்,  சமாஜ்வாதி வென்ற ஒரு உறுப்பினர் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்தது. இவர்களைத் தவிர 4 சுயேச்சை உறுப்பினர்களும் சபையில் உள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, மத்தியில் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிபுகள் வெளியான உடன் ம.பி. எதிர்க்கட்சி தலைவர் கோபால் பார்கவா, காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி உத்தரவிட வேண்டும் மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதினார். இது பற்றி அவர் கூறுகையில், “விவசாயிகள் கடனை ரத்து செய்துவிட்டதாக காங்கிரஸ் அரசு கூறுகிறது. ஆனால், அதுதொடர்பான தகவலை தர மறுக்கிறது. நிதி தொடர்பான கோரிக்கைகள் குறித்தும் எந்த தவலும் அரசிடம் இல்லை. எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவோம். அதில் காங்கிரஸ் தோல்வியடைந்தால் ஆட்சி கவிழும்” என்று தெரிவித்தார்.
பாஜகவின் இந்த நடவடிக்கைகளுக்கு முதல்வர் கமல்நாத் பதில் அளித்துள்ளார். “மத்திய பிரதேச காங்கிரஸ் அரசுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார். காங்கிரஸ் அரசுக்கு போதிய பலம் உள்ளது. ம.பி. ஆட்சியை கலைக்க பாஜக முயற்சி செய்துவருகிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 4 முறை பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறோம். இப்போதும் நிரூபித்து அதில் வெற்றி பெறுவோம்” என்று கமல்நாத் தெரிவித்துள்ளார்.