பிரதமர் மோடி, எகிப்து அதிபர் சந்திப்பு: இந்தியா - எகிப்து இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து!
இந்தியா - எகிப்து இடையே பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன
பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இதற்காக கடந்த 20ஆம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். மேலும், இந்தியா - அமெரிக்கா இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
அத்துடன், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, ஜெட் இன்ஜின் தயாரிப்பு, செமி கண்டக்டர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது உற்பத்தியை தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும், அமெரிக்க நிறுவனங்கள் பலவும் இந்தியாவில் கூடுதல் முதலீடுகள் செய்யவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி எகிப்து சென்றுள்ளார். அங்கு, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிராந்தியத்தில் இயங்கி வரும் மிகப்பெரிய எகிப்திய நிறுவனங்களில் ஒன்றான ஹாசன் ஆலம் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முகமது மேதத் ஹசன் அலாம், பெட்ரோலியம் மூலோபாய நிபுணருமான தரீக் ஹெஜ்ஜி ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், Grand Mufti of Egypt என்றழைக்கப்படும் எகிப்து நாட்டின் மூத்த மதத்தலைவரான டாக்டர் ஷவ்கி இப்ராஹிம் அப்தெல்-கரீம் அலாமை சந்தித்த பிரதமர் மோடி, தாவூதி போஹ்ரா சமூகத்தால் பராமரிக்கப்பட்டு வரும் 1000 ஆண்டுகள் பழமையான அல்-ஹக்கிம் மசூதியை பார்வையிட்டார்.
பிரதமர் மோடிக்கு எகிப்து அரசின் உயரிய விருது: இதுவரை மோடி பெற்ற அரச விருதுகளின் பட்டியல்!
அதன் தொடர்ச்சியாக, எகிப்து தலைநகர் கெய்ரோவில் அந்நாட்டு அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி-யை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கலாச்சாரம் மற்றும் மக்களுடனான உறவுகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரதமர் மோடி, எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி முன்னிலையில், இந்தியா - எகிப்து இடையே பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இருதரப்பு உறவை “மூலோபாய கூட்டாண்மைக்கு” உயர்த்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயம், தொல்லியல், சட்டம் மற்றும் தொல்பொருட்கள் ஆகிய துறைகளில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
முன்னதாக, எகிப்து நாட்டி உயரிய அரச விருதான Order of the Nile விருதினை அந்நாட்டு அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.