Asianet News TamilAsianet News Tamil

குடிபோதையில் வாகனம் ஓட்டாதீங்க!! கடுமையாகிறது தண்டனை..!

motor vehicle act is going to amend to punish drunken drivers
motor vehicle act is going to amend to punish drunken drivers
Author
First Published Dec 23, 2017, 11:08 AM IST


குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவோருக்கு 7ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஏதுவாக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் விபத்துகளால் ஏற்படும் இறப்பு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. சாலை விதிகளை பின்பற்றாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது ஆகியவை விபத்து ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக திகழ்கின்றன.

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், இரண்டு ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது சிறைத்தண்டையுடன் அபராதம் என்ற தண்டனையே தற்போது அமலில் உள்ளது. குடிபோதையில் விபத்து ஏற்படுத்தி மரணத்திற்கு காரணமாக இருப்பவருக்கு இந்த தண்டனை போதுமானதா? என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தது.

இதையடுத்து, குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு போக்குவரத்து அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்து நிலைக்குழுவிற்கு போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை ஒன்றை அளித்தது. அந்த அறிக்கை நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்கும் விதமாக 15 அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிப்பது, அனைத்து வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் கட்டாயம் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios