தனது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானம் கொடுத்த மாமியாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ராஜஸ்தான் மாநிலம் பர்மர் மாவட்டம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கனி தேவி (60). இவரது மருமகள் சோனிகா (30). இவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. இதனால் டயாலிசிஸ் செய்து வந்தார். இந்நிலையில், உடனடியாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதனால், சோனிகாவின் ரத்த வகையைச் சேர்ந்த சிறுநீரகத்தை அவரது உறவினர்களிடம் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்த பெண்ணின் பெற்றோர், சகோதரரின் சிறுநீரகம் அதே ரத்த வகையை கொண்டதாக இருந்தது. ஆனால் அவர்கள் சிறுநீரகத்தை சோனிகாவுக்கு தர மறுத்துவிட்டனர்.

நாளுக்கு நாள் அந்த பெண்ணின் நிலைமை மோசமாகியது. யாரும் பாராதவிதமாக திடீரென மாமியார் கனிதேவி, தனது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தார். உடனடியாக அவரது ரத்த வகை பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் மருமகள், மாமியாரின் ரத்த வகையும் ஒத்துப்போனது. இதையடுத்து, கனிதேவியின் ஒரு சிறுநீரகம் எடுக்கப்பட்டு சோனிகாவுக்கு பொருத்தப்பட்டது. மாமியாருக்கு மருகளுக்கும் ஏழாம் பொருத்தம் என்று சொல்லவார்கள். ஆனால் இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.