கூடுதல் வரதட்சணை கேட்டு மருமகளுக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ஊசியை மாமியார் செலுத்திய கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இந்தியா பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் முன்னேறிய நாடாக உள்ளது. என்னதான் சட்டங்கள் இருந்தால் நாட்டில் வரதட்சணை கொடுமை இன்னும் ஓய்ந்தபாடில்லை. கூடுதல் வரதட்சணை கொடுக்காததால் மாமியார் ஒருவர் மருமகளுக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ஊசியை செலுத்திய கொடூரம் இந்தியாவில் நடந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணுக்கு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது அந்த பெண்ணின் தந்தை சுமார் ரூ.45 லட்சம் செலவிட்டுள்ளார். பெண்ணுக்கு நகை போட்டது மட்டுமின்றி, ஒரு கார் மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக கொடுத்துள்ளார்.
இவ்வளவு வரதட்சணை கொடுத்தும் அந்த பெண் மாமியார் வீட்டில் நிம்மதியாக இல்லை. திருமணம் முடிந்த ஆசை ஆசையாய் பல்வேறு கனவுகளுடன் கணவருடன் சென்ற அந்த பெண்ணுக்கு மாமியார் உள்பட அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். கூடுதலாக வீட்டில் இருந்து நகை, பணம் வாங்கி வரும்படி பெண்ணை கட்டாயப்படுத்திய மாமியார், திருமணம் நடந்த ஒரு மாதத்தில் மார்ச் 25 2023 அன்று அவரை வீட்டை விட்டு வெளியேற்றினார்.
தொடர்ந்து மூன்று மாதங்கள் அவர் தனது தாய் வீட்டில் இருந்த நிலையில், இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்து தலைவர்களின் காதுகளுக்கு சென்றது. ஊர் தலைவர்களின் தலையீட்டுக்கு பிறகு அந்த பெண் மீண்டும் மாமியார் வீட்டுக்கு சென்றார். ஆனால் அப்போதும் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை நிகழ்ந்தது.
மாமியார் மற்றும் குடும்பத்தினர் அவரை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ள்னர். ஒரு கட்டத்தில் கூடுதல் வரதட்சணை கொடுக்காத ஆத்திரத்தில் அந்த பெண்ணுக்கு அவரது மாமியார் எச்.ஐ.வி தொற்றுள்ள ஊசியை உடலில் செலுத்தியுள்ளார். இதனால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இது குறித்து பெண்ணின் தந்தை அருகில் உள்ள காவல் நிலையத்திலும், மாவட்ட எஸ்.பி அலுவலத்திலும் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் அங்கு புகார் ஏற்கப்படாத நிலையில், உத்தரப்பிரதேசத்தின் சஹர்ன்பூரில் உள்ள நீதிமன்றத்தில் பெண்ணின் தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார். ''கடந்த ஆண்டு மே மாதம் என்னுடைய மகளுக்கு அவருடைய மாமியார் எச்.ஐ.வி தொற்றுள்ள சிரிஞ்சை வலுக்கட்டாயமாக செலுத்தினர். அவளுடைய உடல்நிலை விரைவாக மோசமடைந்தது. மருத்துவப் பரிசோதனைகள் எனது மகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது கணவருக்கு எச்.ஐ.வி தொற்று இல்லை'' என்று கூறியுள்ளார். இதன்பேரில் சஹர்ன்பூரில் உள்ள நீதிமன்றம் மாமியார் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய உத்தரப்பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
