உயிரிழந்த பெண்ணின் சடலத்துடன் அவரது தாயாரும், சகோதரரும் ஒரு வாரம் வாழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான ஜீடிமெட்லாவில் ஒரு வாரத்துக்கு முன்பு இறந்து போன 45 வயது பெண்ணின் சடலத்துடன் அப்பெண்ணின் தாயாரும், சகோதரரும் வாழ்ந்து வந்துள்ளனர். அப்பெண் இறந்ததைக் கூட அவர்களாக் அறிய முடியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. கதவைத் தட்டியும் யாரும் திறக்கவில்லை என்பதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கிடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேதப் பிரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வீட்டில் இருந்த அப்பெண்ணின் தாயாரையும், சகோதரரையும் காவல் நிலையம் அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் முரண்பாடான பதில்களை அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. மீதான ஊழல் வழக்கு ரத்து: கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!

“உயிரிழந்த பெண்ணின் தாயாரும், சகோதரரும் மனநிலை சரியில்லாதவர்கள். அப்பெண் இறந்துவிட்டதை அடையாளம் காணும் நிலையில் அவர்கள் இல்லை.” என காவல் ஆய்வாளர் எம்.பவன் தெரிவித்துள்ளார். அந்த பெண் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் சகோதரர் ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்ததாகவும், மனநிலை சரியில்லாத காரணத்தால் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் காவல் ஆய்வாளர் எம்.பவன் தெரிவித்துள்ளார்.