கொலீஜியம் பரிந்துரைகள் விரைவில் அறிவிப்பு: மத்திய அரசு உறுதி!
கொலீஜியம் பரிந்துரைகள் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
உயர் நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்றத்திற்குமான நீதிபதிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் அதிகாரம் கொண்ட ஒற்றை அமைப்பாக கொலீஜியம் செயல்படுகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான இக்குழுவில், மூத்த நீதிபதிகள் 4 பேர் இருப்பர். இக்குழுவே கொலீஜியம் என அழைக்கப்படுகிறது. இக்குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கும்.
ஆனால், இந்த கொலீஜியம் முறைக்கு மத்திய பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், கொலீஜியம் பரிந்துரைகள் தாமதம் செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், 80 பரிந்துரைகளில் 10க்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளது. மீதம் 70 பரிந்துரைகள் நிலுவலையில் உள்ளது என மத்திய அரசை கடுமையாக சாடியது.
இந்த நிலையில், மணிப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி உள்பட அனைத்து பரிந்துரைகளும் அறிவிக்கப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. “நீதிபதிகள் நியமனம் தொடர்பான செயல்முறையை நாங்கள் செய்து வருகிறோம். அக்டோபர் விடுமுறைக்கு முன் அதை முடிக்க முயற்சிப்போம்.” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவைப் பின்பற்றாததற்காக சட்ட அமைச்சகத்திற்கு எதிராக பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் தாக்கல் செய்த மனு உட்பட இரண்டு மனுக்களை விசாரித்தது. அப்போது, பதற்றம் நிறைந்த ஒரு மாநிலத்தின் (மணிப்பூர்) உயர் நீதிமன்ற நீதிபதி உள்பட 70 பரிந்துரைகள் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மத்திய சட்ட அமைச்சகம் முன்பு நிலுவலையில் உள்ளதாக நீதிபதிகள் கடுமையாக சாடினர்.
பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு: ஏமாற்றப்பட்டதாக உணரும் சாதிகள் - சுஷில் குமார் மோடி தாக்கு!
அதன் தொடர்ச்சியாக, கொலீஜியம் பரிந்துரைகள் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனை ஒரு நேர்மறையான முன்னேற்றம் என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், பதற்றம் நிறைந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி நியமனம் செய்வது தொடர்பான விஷயம் இறுதியாக மத்திய அரசின் கவனத்தைப் பெற்றுள்ளது. நிலுவையில் உள்ள 70 பரிந்துரைகளையும் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றது.
மணிப்பூர் மாநிலத்தில் இனக்கலவரம் நிலவி வரும் நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுலை மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க ஜூலை 5ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது என்பது கவனிக்கத்தகக்து.
மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் 26 பேரின் இடமாற்றம் தொடர்பான விவகாரத்தில், 14 பேரது நியமனங்கள் தொடர்பான கோப்புகள் முடிக்கப்பட்டு, விரைவில் அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும், மீதமுள்ள மீதமுள்ள 12 பேரைப் பொறுத்தவரை, அவை நடைமுறையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.