தெரு நாய்களை விட அதிகமாக சுற்றுகிறார்கள்: அமலாக்கத்துறையை வறுத்தெடுத்த ராஜஸ்தான் முதல்வர்!
நாட்டில் தெருநய்களை விட இவர்கள் தான் அதிகமாக உலா வருகிறார்கள் என அமலாக்கத்துறையை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடுமையாக விமர்சித்துள்ளார்
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதற்கிடையே, அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்வுத்தாள் கசிவு வழக்கில் பணமோசடி தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், மஹுயா தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான கோவிந்த் சிங் தோடஸ்ரா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் தீடீரென சோதனை நடத்தினர். மேலும், அந்நியச் செலாவணி விதிமீறல் வழக்கில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், நடைபெற்ற இந்த சோதனைக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடல்சார் துறை சுறுசுறுப்பாகவும், விரைவாகவும் இருக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் அறிவுரை!
இந்த நிலையில், ஜெய்ப்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அசோக் கெலாட், நாட்டில் தெருநய்களை விட இவர்கள் தான் அதிகமாக உலா வருகிறார்கள் என அமலாக்கத்துறையை சத்தீஸ்கர் முதல்வர் சாடியதை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார். இதைவிட பெரிய துரதிர்ஷ்டம் என்ன இருக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
சத்தீஸ்கர் முதல்வர் எந்த கருத்தை எவ்வளவு வேதனையுடன் கூறியிருப்பார் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்ற அசோக் கெலாட், அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய அரசு ஏஜென்சிக்கள் அரசியல் ஆயுதமாக்கப்பட்டு விட்டது. மோடிக்கு புரியவில்லை. அவரது கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது என்றார்.