Asianet News TamilAsianet News Tamil

கடல்சார் துறை சுறுசுறுப்பாகவும், விரைவாகவும் இருக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் அறிவுரை!

கடல்சார் துறை சுறுசுறுப்பாகவும், விரைவாகவும் இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவுறுத்தியுள்ளார்

Maritime sector needs to be agile proactive president of india droupadi murmu smp
Author
First Published Oct 27, 2023, 5:25 PM IST

சென்னை வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 8ஆவது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், 7,500 கி.மீ நீளமுள்ள கடற்கரை மற்றும் 1,382 கடல் தீவுகளைக் கொண்ட குறிப்பிடத்தக்கக் கடல் நிலையை இந்தியா கொண்டுள்ளது என்றார் . முக்கியமான கடல்வழி வர்த்தக வழித்தடங்களில் உத்திபூர்வமான இடத்தைத் தவிர, இந்தியாவில் 14,500 கி.மீ பயணிக்கும் நீர்வழிகள் உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கடல்சார் துறை முக்கியப் பங்கு வகிப்பதாக சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர், நாட்டின் வர்த்தகத்தில் அளவு அடிப்படையில் 95 சதவீதமும் மதிப்பு அடிப்படையில் 65 சதவீதமும் கடல் போக்குவரத்து மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கடலோரப் பொருளாதாரம் 4 மில்லியனுக்கும் அதிகமான மீனவர்களுக்கு வாழ்வளிக்கிறது, மேலும் இந்தியா சுமார் 2,50,000 மீன்பிடி படகுகளுடன் உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி நாடாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

இத்துறையின் ஆற்றலை நாம் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு முன்னர், நாம் பல சவால்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும் என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். ஆழமான கட்டுப்பாடுகள் காரணமாக ஏராளமான சரக்குப்பெட்டகக் கப்பல்கள் அருகிலுள்ள வெளிநாட்டு துறைமுகங்களுக்குத் திருப்பி விடப்படுகின்றன என்று அவர் கூறினார். வர்த்தக மற்றும் பயணிகள் கப்பல் கட்டும் தொழிலில், செயல்திறன், பயன்பாடு, போட்டித்தன்மை ஆகியவற்றின் மிக உயர்ந்த தரங்களை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி: பிரதமர் மோடி புகழாரம்!

இந்தியத் துறைமுகங்களின் செயல்பாட்டுத் திறன்,  கப்பல் வந்து செல்லும் நேரம் ஆகியவை உலகளாவிய சராசரி அளவுகோல்களுடன் பொருந்த வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார். இந்தியத் துறைமுகங்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு முன் உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். சாகர்மாலா திட்டம் "துறைமுக வளர்ச்சி" என்பதில் இருந்து "துறைமுகம் மூலமான வளர்ச்சிக்கு" ஒரு குறிப்பிடத்தக்க நகர்வாகும் என்று அவர் கூறினார்.

அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் கடல் மட்டங்களை உள்ளடக்கிய பருவநிலை பேரழிவு நமது காலத்தின் கடுமையான சவால்களில் ஒன்றாகும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். வாழ்வாதாரங்களை சீர்குலைக்கும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிடையே ஏற்படும் பருவநிலை மாற்றத்தை ஏற்பதிலும் தணிப்பதிலும் கடல்சார் துறை, சுறுசுறுப்பாகவும், விரைவாகவும் இருக்க வேண்டும். மாணவர்களுக்குத் தொழில்முறையிலான பொறுப்பு மட்டுமல்லாமல், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தில் ஒரு கடமையும் உள்ளது என்று அவர் கூறினார்.

கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட கடல்சார் தொடர்பான நிலையான மற்றும் திறமையான நடவடிக்கைகள் காலத்தின் தேவையாகும். ஓர் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புக்கு கடலில் அதிக நெகிழ்திறன் மற்றும் பசுமையான நடைமுறைகளும் அவசியம் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தினார்.

மத்தியப் பல்கலைக்கழகங்களில் மிகவும் இளைய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இருந்தபோதிலும், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் தனது திறமையை நிரூபித்துள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இப்பல்கலைக்கழகம் கடல்சார் சட்டம், கடல் ஆளுமை மற்றும் கடல் அறிவியல் போன்ற தொடர்புடைய துறைகளுக்கு தனது நிபுணத்துவத்தை விரிவுபடுத்தும் அதே வேளையில், கடல்சார் கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, கல்விக் கூட்டாண்மை, திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கு உலக அளவில் பாராட்டப்பட்ட சிறந்த மையமாக உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios