Asianet News TamilAsianet News Tamil

டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி: பிரதமர் மோடி புகழாரம்!

டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியில், இந்தியா எந்த வளர்ந்த நாட்டிற்கும் குறைந்த நிலையில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

PM Modi greets digital technology says India is behind no developed nation smp
Author
First Published Oct 27, 2023, 4:45 PM IST | Last Updated Oct 27, 2023, 4:45 PM IST

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 7-வது இந்தியா மொபைல் மாநாடு 2023-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்திய மொபைல் மாநாடு (ஐஎம்சி) என்பது ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பாகும். இந்த மாநாடு இன்று முதல் வருகிற 29ஆம் தேதி வரை 'உலகளாவிய டிஜிட்டல் கண்டுபிடிப்பு' என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது. ஐஎம்சி 2023 முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களின் மேம்பாடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 100 '5ஜி பயன்பாட்டு ஆய்வகங்களை பிரதமர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 21 ஆம் நூற்றாண்டின் மாறிவரும் காலங்களில், இந்த நிகழ்வு கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது என்றார். தொழில்நுட்பத்தின் வேகத்தில் "எதிர்காலம் இங்கேயே இப்போதே உள்ளது என்று அவர் கூறினார். தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம் மற்றும்  இணைப்புத் துறையில் எதிர்காலம் குறித்த பார்வைகளை வழங்குவதற்காக இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை அவர் பாராட்டினார்.

6 ஜி, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, குறைக்கடத்திகள், ட்ரோன், விண்வெளித் துறைகள், ஆழ்கடல், பசுமை தொழில்நுட்பம் உட்பட பல்வேறு  துறைகளைக் குறிப்பிட்ட அவர், எதிர்காலம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் எனவும்  நமது இளைய தலைமுறை தொழில்நுட்பப் புரட்சியை வழிநடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 5ஜி அறிமுகம் உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். 5 ஜி வெற்றிக்குப் பிறகு இந்தியா அத்துடன் நிற்கவில்லை என்றும், அதை ஒவ்வொரு தனிநபரிடமும் கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டது என்றும் அவர் கூறினார். இந்தியா 5 ஜி அறிமுக கட்டத்திலிருந்து 5 ஜி சென்றடையும் கட்டத்திற்கு நகர்ந்தது என்று அவர் கூறினார். 5 ஜி அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள், 97 சதவீதத்திற்கும் அதிகமான நகரங்கள் மற்றும் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்களை உள்ளடக்கிய 4 லட்சம் 5 ஜி அடிப்படை நிலையங்களின் வளர்ச்சி குறித்து பிரதமர் குறிப்பிட்டார்.

சராசரி மொபைல் பிராட்பேண்ட் வேகத்தின் வேகம் ஒரு வருடத்தில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். பிராட்பேண்ட் வேகத்தில் இந்தியா 118ஆவது இடத்தில் இருந்து 43-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று அவர் கூறினார். நாட்டில் 5 ஜி கட்டமைப்பை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், 6 ஜி-யில் தலைமைத்துவ நாடாக மாறுவதற்கும் இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலைச் சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போதைய அரசின் ஆட்சிக்காலத்தில் நடந்த 4ஜி ஸ்பெக்ட்ரம்  ஒதுக்கீடு ஊழல் ஏதுமின்றி,  நடைபெற்றதாக அவர் கூறினார். 6ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை வகிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தரவரிசை மற்றும் எண்ணிக்கை வளர்ச்சிக்கு அப்பால், இணைய இணைப்பு மற்றும் வேகம் மேம்பட்ட வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது என்று அவர் கூறினார். கல்வி, மருத்துவம், சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகியவற்றில் மேம்பட்ட இணைப்பு மற்றும் வேகத்தின் நன்மைகளை அவர் விவரித்தார்.

ஜனநாயகமயமாக்கலின் சக்தியை நம்புவதாகவும், வளர்ச்சியின் பயன் ஒவ்வொரு பிரிவினருக்கும், பிராந்தியத்திற்கும் சென்றடைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.  இந்தியாவில் உள்ள வளங்களிலிருந்து அனைவரும் பயனடைய வேண்டும் என்று தெரிவித்த அவர், அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றார். தொழில்நுட்பத்தின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று கூறிய அவர் இதற்காக அரசு வேகமாகச் செயல்பட்டு வருகிறது என்று கூறினார். தம்மைப் பொறுத்தவரை, இது மிகப்பெரிய சமூக நீதி, என்று அவர் மேலும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், மூலதனத்திற்கான அணுகல், வளங்களுக்கான அணுகல் மற்றும் தொழில்நுட்ப அணுகல் ஆகியவை அரசின் முன்னுரிமையாகும் என்று தெரிவித்தார்.

 

 

முத்ரா திட்டத்தின் கீழ் பிணையில்லா கடன்கள், கழிவறை வசதிகள் மற்றும் நேரடி பண பரிமாற்றம் ஆகியவை பொதுவான ஒரு விஷயத்தைக் கொண்டுள்ளன என்று அவர் தெரிவித்தார். இவை சாதாரண மக்களுக்கு முன்னர் கிடைக்காத நிலையில் தற்போது, இந்த வசதிகள் மக்களின்  உரிமைகளை உறுதி செய்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கை எடுத்துரைத்த அவர், சுமார் 2 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை பிராட்பேண்ட் உடன் இணைத்த பாரத் நெட் பற்றி குறிப்பிட்டார். 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் சுமார் 75 லட்சம் குழந்தைகளுக்கு அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கின்றன என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள 5 ஜி பயன்பாட்டு ஆய்வகங்கள் இதேபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஆய்வகங்கள் இளைஞர்களை பெரிய கனவு காணத் தூண்டுகின்றன என்றும், அவற்றை அடைவதற்கான நம்பிக்கையை அளிக்கின்றன என்றும் அவர் மேலும் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் புத்தொழில் சூழல் அமைப்பு உலகில் தனக்கென ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். "இந்தியா மிகக் குறைந்த காலத்தில் ஒரு நூற்றாண்டு யுனிகார்ன் நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இப்போது உலகின் முதல் 3 புத்தொழில்  சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது என்று  மோடி குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் சில நூறு புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்ததாகவும், இன்று அந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

ஒப்புதல் வாங்காமல் அரசு ஊழியர்கள் 2ஆவது திருமணம் முடிக்க கூடாது: அசாம் அரசு அதிரடி!

மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்த வெற்றியை மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். தொழில்நுட்பச் சூழல் அமைப்பில் வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டின் வெற்றிக்கு, இந்தியாவில் ஒரு வலுவான குறைக்கடத்தி உற்பத்தித் துறையை உருவாக்குவது முக்கியம் என்று கூறிய அவர், குறைக்கடத்திகளின் வளர்ச்சிக்காக 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். தற்போது உலகெங்கிலும் உள்ள குறைக்கடத்தி நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து குறைக்கடத்தி அசெம்பிளி மற்றும் சோதனை தொழிற்சாலைகளில் முதலீடு செய்கின்றன என்று அவர் தெரிவித்தார். இந்தியாவின் குறைக்கடத்தி இயக்கம் உள்நாட்டு தேவையை மட்டுமல்லாமல் உலகின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான தொலைநோக்கு பார்வையுடன் முன்னேறி வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

இணையதள பாதுகாப்பு மற்றும் நெட்வொர்க் உள்கட்டமைப்பின் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கிய அம்சம் குறித்து எடுத்துரைத்த பிரதமர் நரேந்திர மோடி, ஜி 20 உச்சிமாநாட்டில் இணையதள பாதுகாப்பின் உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்த விவாதத்தை நினைவு கூர்ந்தார். இணையதளப் பாதுகாப்பில் முழு உற்பத்திச் சங்கிலியிலும் தற்சார்பு மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார். 

கடந்த காலங்களில் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் வாய்ப்புகளை இழந்ததாக பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை குறித்து குறிப்பிட்ட அவர், இதில் இந்தியா ஏற்கனவே தனது திறமையை வெளிப்படுத்தியது என்றார். 21 ஆம் நூற்றாண்டின் இந்த காலகட்டம் இந்தியாவின் சிந்தனைத் தலைமையின் காலம் என்று கூறிய பிரதமர் மோடி, மற்றவர்கள் பின்பற்றக்கூடிய புதிய களங்களை உருவாக்குமாறு சிந்தனைத் தலைவர்களை வலியுறுத்தினார். இன்று டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையில் உலகையே வழிநடத்தி வரும் யுபிஐ-யை அவர் உதாரணமாக எடுத்துரைத்தார். வளர்ந்த இந்தியாவாக மாறுவதற்கான இலக்கை அடையும்போது, சிந்தனைத் தலைவர்களாக முன்னோக்கிச் செல்வதன் மூலம் அனைத்துத் துறைகளிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்றும் அவர் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios