உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கொரோனா வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்த போதும் கடந்த சில நாட்களாக தினமும் 2000 நபர்களுக்கு மிகாமல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 62,939 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 2,109 பேர் பலியாகி இருக்கின்றனர். நாடுமுழுவதும் கொரோனாவில் இருந்து 19,357 மக்கள் பூரண நலம் பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 41,472 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஸ்டிரா இருக்கிறது. அங்கு கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை அங்கு 20,228 பேர் பாதிக்கப்பட்டு 779 பேர் மரணமடைந்துள்ளனர்.

அதற்கடுத்தபடியாக குஜராத்தில் 7,797 பேரும், டெல்லியில் 6,542 பேரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இருக்கின்றன.