இந்தியன் ரயில்வே.. சுமார் 2.5 லட்சம் காலிப்பணியிடங்கள் - அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்திய ரயில்வேயில் சுமார் 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதில் அதிக அளவில், அதாவது சுமார் 95 சதவிகிதம் குரூப் C பணிகளுக்கான இடங்கள் தான் காலியாக உள்ளது என்றும், மத்திய அரசு இன்று ஆகஸ்ட் 7ம் தேதி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது.
இந்தியன் ரயில்வேயில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் குரூப் C பணிகளுக்கான இடங்கள் லட்சக்கணக்கில் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. வெளியான தகவலின்படி மொத்தம் 2,48,895 காலியிடங்கள் உள்ளன என்று, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சமர்ப்பித்த தகவல் கூறுகின்றது.
பாஜக எம்.பி சுஷில் குமார் மோடி எழுப்பிய பணி கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் வைஷ்ணவ் பின்வரும் தகவல்களை அளித்தார். அதாவது வடக்கு மண்டலத்தில் தான் அதிகபட்ச காலியிடங்கள் உள்ளன என்று அறிக்கை கூறுகின்றது. வடக்கு மண்டலத்தில் 32,468 காலியிடங்கள், கிழக்கில் 29,869, மேற்கில் 25,597 மற்றும் மத்திய மண்டலத்தில் 25,282 காலியிடங்கள் உள்ளன.
வைஷ்ணவ் வெளியிட்ட பதிலின்படி 2070 குரூப் ஏ மற்றும் பி பதவிகள் காலியாக உள்ளன, இது ரயில்வேயில் உள்ள மொத்த காலியிடங்களின் எண்ணிக்கையை 2,50,965 ஆகக் உயர்த்தியுள்ளது. ஜூன் 30, 2023 நிலவரப்படி மொத்தம் 1,28,349 பேர் குரூப் சி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் ஜூன் 30, 2023 நிலவரப்படி, மொத்தம் 1,47,280 விண்ணப்பதாரர்கள் லெவல் 1 பதவிக்காண பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்திய இரயில்வேயில் ஒரு குழுவிற்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படுவது நேரடியாக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் (UPSC) நடத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். பிப்ரவரி 2023 நிலவரப்படி மொத்தம் 11.75 லட்சம் பணியாளர்கள் இந்தியன் ரயில்வேயில் பணிபுரிவதாகவும் கூறினார்.