மணிப்பூரில் என்ன நடக்கிறது? மேலும் படைகள் குவிப்பு, முதல்வர் அவசர ஆலோசனை... முழு விவரம்
ஏற்கெனவே 14 கம்பெனி பாதுகாப்புப் படைகள் மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 20 குழுக்களை மத்திய அரசு மணிப்பூருக்கு அனுப்புகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி-மெய்ட்டீ பழங்குடி மக்கள் இடையே நடைபெற்ற வன்முறைக்குப் பின்பு அம்மாநில முதல்வர் பிரேன் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சனிக்கிழமை நடத்தினார். சில பகுதிகளில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் வெடித்தாலும், பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து ஒழுங்கைப் பேணுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரேன் சிங் மற்றும் முன்னாள் முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் ஆகியோர் பதட்டத்தைத் தணிக்க கட்சி எல்லைகளுக்கு அப்பால் அனைவரும் பணியாற்ற முன்வந்துள்ளனர். இயல்புநிலையைக் கொண்டுவர உதவுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். வன்முறைச் சம்பவங்களில் குறைந்து 50 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இன்னும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை இரவு, சூராசந்த்பூரில் ஆயுதம் ஏந்திய உள்ளூர்வாசிகள் சிலருக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றது. ஏற்கெனவே மணிப்பூர் முழுவதும் சுமார் 14 கம்பெனி பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 20 பாதுகாப்புப் படைகள் மத்திய அரசால் அனுப்பப்படுகின்றன.
பிரதமர் மோடிக்கு காத்திருக்கும் ஏலக்காய் கிரீடம், மாலை; செய்தது யாருன்னு தெரியுமா?
மலைப்பகுதிகளில் வசிக்கும் மெய்ட்டீஸ் மற்றும் இம்பாலில் வசிக்கும் குக்கி சமூகங்களைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மெய்ட்டீஸ் மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினரின் அமைப்புகளும் பதற்றம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் சிக்கியவர்களை பாதுகாக்க ஒத்துழைப்பு தருவதாகச் சொல்லி இருக்கின்றன.
கடந்த சில தினங்களில் 8 காவல் நிலையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைக்குமாறு போலீசார் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். மணிப்பூரில் வன்முறையின்போது திருடப்பட்ட துப்பாக்கிகளை ஏந்திய சிலர் தெருக்களில் சுற்றித் திரிவது போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.
எல்லையை ஒட்டிய அடர்ந்த காடுகளில் கிளர்ச்சியாளர்கள் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கான தற்போதைய முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்பு உள்ளதால், மியான்மர் எல்லையில் ராணுவம் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
மணிப்பூரில் இம்பால் சமவெளிப் பகுதிகளில் குடியேறிய மெய்ட்டீஸ் சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து பெற முயற்சி செய்கின்றனர். இது தொடர்பான வழக்கில் மாநில அரசு அவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்யவேண்டும் என்று உத்தரவிட்டதுதான் போராட்டம் வெடிக்க முடிக்கக் காரணமாக அமைந்துள்ளது.
கிறிஸ்தவர்களான குக்கி பழங்குடியினர், மெய்டீஸ் சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடி மக்கள் அந்தஸ்து வழங்குவதை எதிர்க்கின்றனர். மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், மெய்ட்டீஸ் சமூகத்தினர் என்று கூறிக்கொண்டு மலைப்பகுதிகளில் குடியேறக்கூடும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கர்நாடக தேர்தல் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, மணிப்பூருக்குச் சென்றிருக்கிறார். அங்கு மாநில நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தவருகிறார்.
சட்டப்பிரிவு 355
இந்நிலையில், மத்திய அரசு மணிப்பூர் மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 355 -ஐ அமல்படுத்தியுள்ளது. உள் தொந்தரவுகள் மற்றும் வெளிப்புற ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக ஒரு மாநிலத்தைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மத்திய அரசுக்கு இந்த சட்டப்பிரிவு அதிகாரம் அளிக்கிறது.
நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், விரைந்து செயல்பட்டு அதற்குத் தீர்வு காண்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இந்த சட்டப்பிரிவு அமைந்துள்ளது. இந்தச் சட்டப்பிரிவை அமல்படுத்துவதன் மூலம் பொதுவாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சட்ட ஒழுங்கு துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும்.
கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து துறைகளில் தமிழ்நாடு முன்னேறியது எப்படி?