நிலவின் மேற்பரப்பில் உள்ள தூசு துகள்கள் விக்ரம் லேண்டரின் பாகங்களோடு ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், இயந்திரக் கோளாறுகள் ஏற்படலாம் என்று இஸ்ரோவுக்கு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் முக்கியமான செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது. 
நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்வதற்காக ‘சந்திரயான் 2’ விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. 3 லட்சத்துக்கும் அதிகமான கிலோ மீட்டர் தாண்டி பயணம் செய்த விண்கலம் கடந்த ஆகஸ்ட்  20 அன்று நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. படிப்படியாக சுற்றுவட்டப்பாதையை அதிகரித்த இஸ்ரோ, செப்டம்பர் 7 அன்று நிலவை நெருங்கியது. இதனையடுத்து ‘சந்திரயான் 2’ விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டரை  தனியாகப் பிரித்து நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டது. விக்ரம் லேண்டர் தரையிறங்க 2.1 கி.மீ தூரம் இருந்தபோது, அதன் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டபோதும். ஆர்பிட்டரை சுற்றிவரும் கேமரா மூலம் அது, நிலவின் மேற்பரப்பில் உடையாமல் சாய்ந்த நிலையில் இருப்பதை இஸ்ரோ கண்டறிந்தது. விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் வெறும் 14 நாட்கள் மட்டுமே என்பதால், அதற்கு முன்பாக அதனோடு தகவல் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சி செய்துவருகிறார்கள். இந்த முயற்சியில் அமெரிக்காவின் நாசாவும் உதவப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
இந்நிலையில், விக்ரம் லேண்டர் குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோவுக்கு முக்கியமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “நிலவின் தென் துருவம் மிகவும் ஆபத்தான சூழல் உள்ள பகுதி. அங்கு கதிர்வீச்சுகள் எப்போதும் அதிகமாகவே இருக்கும். அங்கே சுற்றும் தூசுகளும் அபாயகரமாக இருக்கும். நிலவின் மேற்பரப்பில் உள்ள தூசுகள், விக்ரம் லேண்டரின் பாகங்களோடு ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு. இதனால் இயந்திரக் கோளாறு ஏற்படலாம்.

 
அந்த தூசு துகள்களால் மின்காந்த அலைகள் ஏற்பட்டு, எதிர்காலத்தில் லேண்டர்களுக்கும் மனிதர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம். இதுவரை நிலவில் காணப்படும் தூசு துகள்களின் செயல்களைப் பற்றி அதிககளாவில் ஆராயப்படாத நிலையில், அதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியம். விக்ரம் லேண்டர் உயிர்ப்போடு இருந்தால், விண்கலத்திற்கு வெளியேயும் உள்ளேயும் தூசு, துகள் பிரச்னையை எதிர்த்து இஸ்ரோ போராட வேண்டியிருக்கும்” என அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.