Monkeypox outbreak: குரங்கு அம்மை நோய் குழுந்தைகளுக்கு அதிகம் பரவும்-ஐ.சி.எம்.ஆர். வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
மக்கள் குரங்கு அம்மை நோய் பாதிப்பை கண்டு பதற்றம் அடையக் கூடாது. குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்த்து விட வேண்டும்.
உலகம் முழுக்க குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) குரங்கு அம்மை நோய் சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உண்டு என தெரிவித்து இருக்கிறது. பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், இந்தியாவில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வாளர் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “குழந்தைகளுக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். சின்ன அம்மை நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் ஊசியை வயதானவர்கள் செலுத்திக் கொண்டுள்ளனர். 1980-க்களுக்கு பின் சின்ன அம்மை நோய் வரவிடாமல் தடுக்கும் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஊசியை செலுத்திக் கொள்ளாதவர்கள், இளம் வயதினருக்கு இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம்,” என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியாளர் டாக்டர் அபர்னா முகர்ஜீ தெரிவித்தார்.
பதற்றம் வேண்டாம்:
மக்கள் குரங்கு அம்மை நோய் பாதிப்பை கண்டு பதற்றம் அடையக் கூடாது. குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் நெருங்கி பழகுவதை தவிர்த்து விட வேண்டும். “இந்த நோய் பாதிப்பு குறித்து மக்கள் பதற்றம் அடையக் கூடாது, இதன் அறிகுறிகள் இது நெருங்கி பழகினால் தான் பரவும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே ஐ.சி.எம்.ஆர். என்.ஐ.வி. தரப்பில் வெளயிடப்பட்டு இருக்கிறது,” என அவர் மேலும் தெரிவித்தார்.
குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் பற்றியும் ஐ.சி.எம்.ஆர். ஆராய்ச்சியாளர் பட்டியலிட்டுள்ளார். அதன்படி குரங்கு அம்மை பரவும் நாடுகளில் இருந்து பயணம் செய்பவர்களிடம் இருந்து பொது மக்கள் விலகி இருக்க வேண்டும்.
குரங்கு அம்மை நோய் பாதிப்பு அறிகுறிகள்:
உடல் வலி
தழும்புகள்
காய்ச்சல்
நிணநீர் அழற்சி
ஊண் திரள்
விழிப்புணர்வு:
குரங்கு அம்மை நோய் பாதிப்பை தடுப்பதற்கு சரியான வழிமுறைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் தடுப்பூசி கையிருப்பு பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது. “இந்த நோயின் தீவிரம் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஆனால் நான் ஏற்கனவே கூறியதை போன்றே, அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்படுவதால், நாம் ஒரு நாடாக மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும். இப்போதே சரியான நடவடிக்கைகளை எடுக்க துவங்கினால், இந்த நோய் பாதிப்பை நம்மால் எளிதில் தடுத்து நிறுத்தி விட முடியும்.”
“இதன் காரணமாக தான் இன்று இந்த விவரக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாங்கள் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதன் மிகுந்த துவக்கக் கட்டத்தில் இருக்கும் போதே அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். இந்த நோய் பரவலை தடுக்க இதுவே நமக்கு மிக சரியான தருணம்,” என உலக சுகாதார மையத்தின் இயக்குனர் சில்வி பிரியண்ட் தெரிவித்தார்.