வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் பொதுமக்கள், தங்களின் மகள், அல்லது மகன் திருமணச் செலவுக்காக ரூ.2.5 லட்சம் எடுக்க அனுமதிக்கும் முடிவை வங்கிகள் செயல்படுத்துவது காலதமாதாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ரிசர்வ்வங்கியிடம் இருந்து செயல்பாட்டு வழிமுறைகள் இன்னும் வந்து சேராததால், அது வந்த சேர்ந்தபின்தான், மக்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புக்குபின், மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க கடும்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. செல்லாத ரூபாய் நோட்டுகள் மாற்றுவதும் ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

வீட்டில் விசேஷம், ஈமச்சடங்கு, மருத்துவச்செலவுக்காக பணத்தை வங்கியில் எடுக்க முடியாமல் மக்கள் திணறினர். வங்கியில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் நின்று மக்கள் நாள்தோறும் நொந்து வருகின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியதையடுத்து, மத்தியஅரசு கடந்த வாரம், பணம் எடுப்பதில் 7 புதிய உத்தரவுகளைப் பிறப்பித்தது.

அதில் வீட்டில் திருமண விசேஷங்கள் வைத்து இருப்போர் பத்திரிகைகளை வங்கி அதிகாரிகளிடம் காண்பித்து, பான்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சமர்பித்து ரூ.2.50 லட்சம் வங்கிக்கணக்கில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டது. அந்த உத்தரவு வந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இந்தநிலையில், அந்த உத்தரவை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது மேலும் தாமதமாகும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளர் இயக்குநர் உஷா அனந்தசுப்பிரமணியன் கூறுகையில், “ திருமணத்துக்காக மக்கள் தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் எடுப்பதை அனுமதிப்பது குறித்து ரிசர்வ் வங்கியிடம் இருந்து இன்னும் வழிகாட்டுநெறிமுறைகள் வந்து சேரவில்லை. ரிசர்வ் வங்கி உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.

அந்த உத்தரவுகள், அடுத்தவாரம் திங்கள் அல்லத செவ்வாய்கிழமை வரலாம். அதன்பின், இந்த திட்டத்தில் வங்கிகள் திருமண வீட்டார்களுக்கு பணம் வழங்கும். இதன்படி, திருமணம் வைத்திருக்கும் மணமகன், மகள் வீட்டார் பெற்றுக்கொள்ளலாம். இதில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே ரூ.2.5 லட்சம் எடுக்க அனுமதிக்கப்படும். எங்களிடம் இருக்கும் 9 ஆயிரம் ஏ.டி.எம்.களில் 2 ஆயிரம் ஏ.டி.எம்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு செயல்பாட்டுக்கு அடுத்த வாரம் வரும். விரைவில் மக்கள் வங்கியில் செய்திருக்கும் டெபாசிட்களுக்கான வட்டி குறைப்பு அறிவிப்பு விரைவில் வெளியாகும் '' எனத் தெரிவித்தார்.