ஒடிசா முதல்வராகிறார் பாஜகவின் மோகன் சரண் மாஜி! நாளை பதவியேற்பு விழா!
நாளை முதல்வராகப் பதவியேற்க இருக்கும் மோகன் சரண் மாஜி கியோஞ்சார் தொகுதியில் 87,815 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்தத் தொகுதியில் பிஜேடியின் மினா மாஜியை தோற்கடித்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவர் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. பிஜு ஜனதா தளத்தை வீழ்த்திய பாஜக சார்பில் ஒடிசாவின் முதல்வராக மோகன் மாஜி பதவியேற்கவுள்ளார்.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பூபேந்தர் யாதவ் ஆகியோர் கலந்துகொண்டபாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் மோகன் சரண் மாஜி சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் ஒடிசாவின் முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை முதல்வராக கனக் வர்தன் சிங் தியோ தேர்வு செய்யப்பட்டார்.
2000 முதல் 2004 வரை பிஜேடி பாஜகவுடன் கூட்டணி வைத்து ஒடிசாவில் ஆட்சி செய்தது. இப்போது முதல் முறையாக பாஜக ஒடிசாவில் தனித்து ஆட்சி அமைக்கிறது.
நாளை முதல்வராகப் பதவியேற்க இருக்கும் மோகன் சரண் மாஜி கியோஞ்சார் தொகுதியில் 87,815 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்தத் தொகுதியில் பிஜேடியின் மினா மாஜியை தோற்கடித்தார்.
புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவையொட்டி, புவனேஸ்வரில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களும், நீதிமன்றங்களும் ஜூன் 12ஆம் தேதி மதியம் 1 மணிக்குப் பிறகு மூடப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புவனேஸ்வர் முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகார வரம்பிற்குள் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் வருவாய் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு (நிர்வாகம்) இந்த உத்தரவு பொருந்தும் என்று கூறியுள்ளது.