மோடி மீண்டும் பிரதமராவார்: ஜோசியம் சொன்ன லாலாசாப்!
கர்நாடக மாநிலம் ஹெப்பாளி தர்காவில் ஒவ்வொரு வருடமும் தீர்க்கதரிசனம் சொல்லும் லாலாசாப், மோடி மீண்டும் பிரதமராவார் என கணித்துள்ளார்

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஹெப்பாளி கிராமத்தில் லாலாசபாவளி தர்கா அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மொஹரம் பண்டிகையையொட்டி, தீர்க்க தரிசனம் சொல்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு மொஹரம் பண்டிகையையொட்டி தீர்க்க தரிசனம் சொன்ன லாலாசாப், காவி துணியை பிடித்துக் கொண்டு நாற்காலி திடமாக இருக்கும் என்றார்.
லாலாசாபின் கணிப்பு அரசியல் ரீதியாக அலசப்பட்டு, மோடி மீண்டும் பிரதமராவார் என்பதையே அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. லாலாசாப், காவி துணியை பிடித்துக் கொண்டு, “இதற்காக மக்கள் அதிகம் போராடுகிறார்கள். நாற்காலி அவர்களுக்கு திடமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து உள்ளது. அவர்களுக்கான ஆபத்து காற்று அல்லது தண்ணீரால் வரக்கூடும். பருவமழை அறுவடை பாதி முடிந்துள்ளது. இனி வரும் காலங்களிலும் இதுபோன்ற பயிர்களை தருவேன்.” என ஆருடம் கூறினார்.
லாலாசாபின் இந்த ஆருடத்தை அரசியல் ரீதியாக அணுகும் பாஜகவினர், தங்களுக்கு வெற்றி உறுதியாகி விட்டதாக கூறிவருகின்றனர். மேலும், நாட்டில் உள்ள குழந்தைகளின் உடல் நலத்துக்கும் ஆபத்து இருப்பதாக கூறப்படுவதால், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். குழந்தைகளுக்கு ஆபத்து காற்று அல்லது தண்ணீர் மூலம் வரும் என அவர் குறி சொல்லியுள்ளார். விவசாயத்தை பொறுத்தவரை பருவமழை தாமதமாக பெய்ததால் பாதி விளைச்சல் வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் மகசூல் நன்றாக விளைந்து விவசாயிகளின் கைக்கு லாபம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மொஹரம் என்பது முஸ்லிம்களின் பண்டிகையாக இருந்தாலும் கூட, வட கர்நாடகாவின் பல பகுதிகளில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து பக்தியுடன் இந்த பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். முஸ்லிம்கள் குறைவாக உள்ள கிராமங்களில் இந்துக்கள்தான் முன் நின்று மொஹரம் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாகவே கோவிந்தகொப்பா, சிக்கசௌம்சி, ஜுன்னூர் கிராமங்களில் மொஹரம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில், லாலாசாபின் கணிப்பு வைரலாகி வருகிறது.