சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை அமைச்சகம்  உத்தரவிட்டது. இந்தநிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து மாநிலங்களும் உச்சகட்ட பாதுகாப்பில் உள்ளன. அயோத்தி அமைந்திருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு இன்று முதல் நவ.11 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டில், "அயோத்தி வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு எந்த முடிவை அளித்தாலும் அது யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ இருக்காது. நாட்டு மக்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், இந்த முடிவு சமாதானத்தின் பெரிய பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்திற்கு நம் அனைவருக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.