உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி 21 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை பரிதவிக்கும் நிலையில் இந்தியாவிலும் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. இதுவரையிலும் 649 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த நிலையில் மக்களிடையே கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக முதன் முதலாக கடந்த 22ஆம் தேதி நாடு முழுவதும் சுய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிரதமர் மோடியின் கோரிக்கைக்கிணங்க நாட்டு மக்கள் அனைவரும் அதற்கு அமோக ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அதற்காக 21 நாட்கள் ஊரடங்கு நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமல் படுத்தப்படுவதாக அறிவித்தார். அதன்படி 24 ஆம் தேதி நள்ளிரவில் இருந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடைகள், வணிக வளாகங்கள், தொழில்நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு மக்கள் வீட்டில் இருக்க அரசு அறிவித்திருக்கிறது.

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் நேற்று தனது சொந்த தொகுதியான வாரணாசி மக்களிடம் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக உரையாடினார். அப்போது அவர் கூறும்போது, கொரோனா வைரஸுக்கு ஏழை, பணக்காரன் என்கிற பேதம் தெரியாது என்றும் எனவே மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கூறினார். எப்படி மகாபாரத போர் 18 நாட்கள் நடந்ததோ அதே போல கொரோனா வைரஸுக்கு எதிராக 21 நாட்கள் போர் தற்போது தொடங்கியிருக்கிறது என்ற பிரதமர் இந்தப் போரில் நாம் வெல்வதே நோக்கம் என்றார். மேலும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்களை மக்கள் ஒதுக்கி வைப்பது வேதனை அளிப்பதாகவும் பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார்.