சந்திரயான்- 2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான, 'விக்ரம் லேண்டர்' நிலவின் தென் துருவ பகுதியில் 70 டிகிரி கோணத்தில் மான்ஸினஸ்- சிம்பிலியஸ்- எஸ் இடையே உள்ள பள்ளத்தாக்கில் மெதுவாக தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் இருந்த லேண்டர் தகவல் தொடர்பை இழந்தது. 

உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சந்திரயான் 2 தரையிறக்கம் தடைபட்டது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
 
இந்நிலையில் இன்று பெங்களுருவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே கிடையாது. 


கடைசி வரை போராடிய நீங்கள் தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்; எந்த ஒரு பின்னடைவும், நமக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொடுக்கும். நிலவை தொடும் நமது முயற்சி நிச்சயமாக வெற்றியடையும். நாடும், நானும் எப்போதும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உறுதுணையாக இருப்போம். இன்றைய நாளின் அனுபவத்தின் மூலம் நாளை நாம் நிச்சயம் சாதிப்போம் என விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் பேசினார்..

நாட்டுக்கான உங்களது பங்களிப்பை வார்த்தையால் விவரிக்க முடியாது. பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் நாம் பயணிப்போம் என மோடி உருக்கமாக பேசினார். அப்போது  விஞ்ஞானிகள் உணர்ச்சி பெருக்கால் கண்ணீர் சிந்தினர். குறிப்பாக பெண் விஞ்ஞானிகள் கதறி அழுதனர்.

இதையடுத்து பிரதமர் மோடி ஒவ்வொரு விஞ்ஞானியையும் தனித்தனியாக சந்தித்து கைகுலுக்கு ஆறுதல் தெரிவித்தார். அதனால் விஞ்ஞானிகள் அனைவரும் கண் கலங்கினர். இறுதியில் பிரதமரை வழி அனுப்பும்போது இஸ்ரோ தலைவர் கண்ணீர் விட்டு அழுததும், அவரைக் கட்டிப்பிடித்து மோடி ஆறுதல் சொன்னதும் உணர்ச்சிப் பெருக்கின் உச்சகட்டமாக அமைந்தது.