குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலிலும் எங்களுக்கு ஆதரவு கொடுங்க…. இபிஎஸ், ஓபிஎஸ்சிடம் பேசிய   பிரதமர் மோடி…

துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி ஆதரவு கேட்டார்.

துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக பாஜக  ஆட்சி மன்றக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.  

இந்த கூட்டத்தில் வெங்கையா நாயுடுவை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை பாஜக  தலைவர் அமித்ஷா அறிவித்தார்.

இதனையடுத்து, வெங்கையா நாயுடுவுக்கு தொலைபேசி மூலம் ஆதரவு கோரி அனைத்துக்கட்சித் தலைவர்களிடமும் பிரதமர் மோடி பேசி வருகிறார்

முன்னதாக அதிமுக  புரட்சித்தலைவி அம்மா அணியின் ஓபிஎஸ்சிடம்  முதலாவதாக பேசி ஆதரவு கேட்டார்.  உடனடியாக அவரும் வெங்கையா நாயுடுவை ஆதரிக்க உள்ளதாக அறிவித்தார்.இதையடுத்து  தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசி ஆதரவு கேட்டார். ஏற்கனவே, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக  வாக்களித்துள்ள நிலையில், வெங்கையா நாயுடுவையே ஆதரிக்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.