பிரதமர் நரேந்திர மோடி, தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி முன்னாள் ராணுவத்தினர் கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷண் கிரேவால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள சென்ற ராகுல் காந்தியை ஜந்தர் மந்தர் பகுதியில் டெல்லி போலிசார் கைது செய்து 2 மணி நேரம் கழித்து விடுவித்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், ராணுவ வீரரின் குடும்பத்தினரை போலீசார் தரதரவென இழுத்துச் சென்றதாகவும், அவர்களை தாக்கியதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எனவே, இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் தெரிவித்தார்.
