நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியாவில் இருந்து சந்திராயன் விண்கலம் கடந்த ஜூலை 22 ம் தேதி அனுப்பப்பட்டது. சந்திராயனில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று அதிகாலை நிலவில் கால் பதிக்க இருந்தது.

இந்த நிகழ்வை காண்பதற்காக பெங்களூரு இஸ்ரோ மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் மோடி ஸ்ரீஹரி கோட்டாவிற்கு நேரடியாக வந்திருந்தார். அவருடன் சேர்ந்து இந்த நிகழ்வை பார்ப்பதற்காக நாடு முழுவதும் இருந்து 60 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

திட்டமிட்டபடி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க சென்று கொண்டிருந்தது. சரியாக அதிகாலை 1.55 மணிக்கு இந்த நிகழ்வு நடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிலவில் தரையிறங்க 2.1 கிலோமீட்டர் இருந்த நிலையில் விக்ரம் லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த விஞ்ஞானிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சில நிமிடங்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் உலகம் முழுவதும் இருந்து பார்த்து கொண்டிருந்த மக்கள் குழம்பி இருந்தார்கள். இஸ்ரோ மையமே நிசப்தத்தில் மூழ்கியது.

இதையடுத்து பிரதமர் மோடியிடம் சென்று இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகள் நடந்ததை விளக்கினர். அதன்பிறகு சிவன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் திட்டமிட்டபடி சென்றுகொண்டிருந்த விக்ரம் லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் அது குறித்த காரணங்கள் ஆய்வு செய்யப்படுவதாகவும் அறிவித்தார். இதனால் ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்த மக்கள் சோகமடைந்தனர். 

இதன்பிறகு விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, "நாம் செய்திருப்பது சாதாரண காரியமில்லை. தைரியமாக இருங்கள். வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நாட்டிற்கு மிகப்பெரிய சேவை ஆற்றி இருக்கிறீர்கள். எப்போதும் உங்களுடன் நான் துணை நிற்பேன். நீங்கள் தைரியமாக இருங்கள்" என்று நம்பிக்கையூட்டினார்.

இன்று காலை மீண்டும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய மோடி அங்கிருந்து கிளம்பினார். அப்போது வாசல் வரை வந்து வழியனுப்பிய இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர்விட்டு கதறி அழுதார். அவரை கட்டிப்பிடித்து பிரதமர் ஆறுதல் படுத்தினார். இந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் கலங்கச் செய்தது. இந்த காணொளி தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.