modi rupees issue special story

அன்று இரவு 8 மணி. நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் இயல்பான பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அலுவலகத்திலிருந்து, தொழிற்சாலையிலிருந்து அப்போதுதான் ஆண்களும், பெண்களும் வீடு திரும்பிய நேரம்.

பல சிறு, குறு தொழிற்சாலைகளில் அன்றுதான் சம்பளமும் ரொக்கப் பணமாக தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. இதை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் தொழிலாளர்களும் வீட்டுக்கு வந்த நேரம்.

இப்படி சலனமில்லாத நீரோடை போன்று, இயல்பான வாழ்க்கையைத்தான் மக்கள் அன்று கடத்திக்கொண்டு இருந்தனர். ஆனால், அடுத்த 15 நிமிடங்களில் தங்களை பிச்சைக்காரர்களாக ஆக்கிப் பார்க்கும் ஒரு அறிவிப்பு வரப்போகிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை.

சரியாக 8.15 மணிக்கு நாட்டையே புரட்டிப் போட்ட அந்த அறிவிப்பு வெளியானது. தொலைக்காட்சியில் பிரதமர் மோடி தோன்றி மக்களுக்கு உரையாற்றினார்.

“ 2016, நவம்பர் 8-ந்தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது, அதற்கு பதிலாக ஒரு நாள் கழித்து வங்கி, தபால் நிலையங்களில் செல்லாத ரூபாய்களை கொடுத்து புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை பெற்றுக்கொள்ளலாம். நாட்டில் கருப்பு பணம், கள்ளநோட்டு, தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிக்க இதுதான் சரியானது. மக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த நிலை அடுத்த சில நாட்களில் சரியாகிவிடும்’’ என்றார்.

பிரதமர் மோடியின் அறிவிப்பைக் கேட்டதும் சாமானிய மக்கள் முதல் நடுத்தர, உயர் நடுத்தர பிரிவினர் வரை தலையில் கைவைத்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

30 நாட்களும் வியர்வை சிந்தி உழைத்து அன்றுதான் ரூ.500, ரூ.1000 நோட்டுகளில் ரொக்கமாக வாங்கிய சம்பளப் பணத்தை பார்த்து சிலர் கதறினர், சிலர் அடுத்து என்ன நடக்குமோ? என பீதியில் தவித்தனர். அன்று முதல் அடுத்த 50 நாட்களுக்கும் மக்களை, ‘மகுடிக்கு ஆடும் பாம்பைப்போல’ ஆட்டி வைத்தது மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு.

5 நாட்களில் நிலைமை சரியாகும் என்று முதலில் கூறிய பிரதமர் மோடி, நவம்பர் 13-ல் கோவாவில் நடந்த நிகழ்ச்சியில் உருக்கமாக பேசினார்.

“டிசம்பர் 30 வரை 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்; என்னுடைய நோக்கத்திலோ, செயல்பாட்டிலோ ஏதேனும் தவறு இருந்தால் என்னைப் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள்” என்று பேசினார்.

நவம்பர் 8-ந்தேதிக்கு பின் ஒவ்வொரு நாள் விடியலும் மக்களுக்கு நரகமாகவே இருந்தது.

தன்னுடைய பணம் வங்கியில் இருந்த போதிலும், அதை எடுக்க வங்கி முன் வரிசையில் காத்திருக்க நேர்ந்தது. மருந்து வாங்க, ஓய்வூதியம் பெற, குழந்தைகளுக்கு பள்ளிக்கூட ‘பீஸ்’ கட்ட, வீட்டு வாடகை கொடுக்க, மகனின் கல்லூரிக் கட்டணம் செலுத்த என அனைத்துக்கும் கையில் பணம் வைத்துக்கொள்ளாமல் வங்கியில் வைத்துள்ள சேமிப்பைத்தான் நடுத்தர குடும்பத்தினர் நம்பி இருந்தனர். மோடியின் உத்தரவால் அனைவரும் நடுத்தெருவுக்கு வந்தனர்.

அதிலும் ஒவ்வொரு நாளும் பணம் இவ்வளவுதான் என ‘ரேஷன்’ வைத்து வழங்கப்பட்டது. வங்கி முன் வரிசையில் காத்திருந்தால் பணம் கிடைக்குமா?, பணம் தீர்ந்துவிட்டது என்று சொல்லிவிடுவார்களோ? என காலையில் கண்விழித்தது முதல் இரவு கண் இமை மூடும் இதே நினைப்போடு மக்கள் இருந்தனர்.

சிலருக்கு வங்கி வாசலில் காத்திருப்பதே வேலையாக இருந்தது. வரிசையில் நிற்கவேண்டுமே என்ன செய்ய.. என்று புலம்பிக்கொண்டே காலையில் சாப்பிடாமல், கையில் சிற்றுண்டியுடன் வந்து நின்ற முதியவர்கள், நடுத்தர குடும்பத் தலைவர்கள் ஏராளம்.

முதியோர் உதவித்தொகை பெறவும், வீட்டுச் செலவுக்காகவும், கையில் இருந்த செல்லாத நோட்டுகளை மாற்றவும், வீட்டின் அஞ்சறைப்பெட்டியில் குருவிசேர்த்தது போல் சேர்த்த காசை மாற்ற குடும்பபெண்களும் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பிணத்தை அடக்கம் செய்யக்கூட பணம் இல்லாமல், வரிசையில் நின்று பணத்தைப் பெற்று அடக்கம் செய்ய வேண்டிய நிலையும் வடமாநிலங்களில் நிலவியது. பணம் கிடைக்காமல் பிணத்தை 2 நாள்கழித்து அடக்கம் செய்த நிகழ்வும் நடந்தது.

இதில் வெயிலில் நிற்க முடியாமல், வங்கி வாசலில் காத்திருக்க முடியாமல் சுருண்டு விழுந்து நாள்தோறும் பலர் இறந்தனர். மருத்துவமனையில் சிகிச்சையின் போது செல்லாத நோட்டுகளை நிர்வாகம் வாங்க மறுத்ததால், சிகிச்சை பெறமுடியாமல் பலர் மாண்டனர், குழந்தைகள் பலர் இறந்த கொடுமையும் நிகழ்ந்தது.

சிலர் வங்கியில் பணம் இருந்தும் அவசரத்துக்கு எடுக்கமுடியவில்லையே என்ற மனவிரக்தியில், உளைச்சலில் தற்கொலையும் செய்தனர். வங்கி ஊழியர்கள் வேலைப்பளுவால், மனஅழுத்தத்தில் பலர் இறந்தனர். இப்படி. அந்த 50 நாட்கள் முடிவதற்குள் 150-க்கும் மேற்பட்டோர் அரசுக்கு காவு கொடுக்கப்பட்டனர்.

செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கி, தபால்நிலையம் ஆகியவற்றோடு அம்பானி நடத்தும் ‘பிக் பஜாரை’யும், தனியார் மருந்துக் கடைகளையும், பெட்ரோல் பங்க்குகளையும் கூட நம்பிய மோடி அரசு, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்த கூட்டுறவு வங்கிகளை நம்பத் தயாராக இல்லை.

வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூபாய் நோட்டுகளை மாற்ற தடை விதித்ததுதான் உச்சகட்ட கொடுமை. இதனால் கிராமப்புறப் பொருளாதாரம் முற்றிலும் நிலைகுலைந்தது. விவசாயிகள் சீரழிந்தனர்.

நாட்டில் 85 சதவீதம் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மதிப்பு ரூ. 15.44 லட்சம் கோடி ஆகும். இந்த நோட்டுகளை செல்லாது என அறிவிக்கும் போது அதற்கு ஈடாக போதுமான நோட்டுகளை வைத்து இருக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இருக்கிறது.

ஆனால், புதிய 2,000 ரூபாய் நோட்டுக்களாக சுமார் ரூ.6.5 லட்சம் கோடி மட்டுமே ரிசர்வ் வங்கியின் கைவசம் இருந்தது. ஆனால், புதிய 500 ரூபாய் ஒரு தாள்கூட அதன் கைவசம் இல்லை.

இங்கு தான் பிரச்சினை தொடங்கியது. புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடித்து முழுமையாக புழக்கத்துக்கு வர 5 மாதங்கள் தேவைப்பட்டது. ஏ.டி.எம்.களும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வைக்கும் வகையில் மாற்றப்படவில்லை, அதற்கும் 3 வாரம் தேவைப்படும் என்பதால், மக்கள் பணத்துக்காக திண்டாடினர். இது பிரச்சினையை மேலும் தீவிரமாக்கியது. கையில் கிடைத்த 2,000 ரூபாய் நோட்டுக்குச் சில்லரை கிடைக்காமல் பொதுமக்கள் அல்லாடினர்.

ஆனால், மக்கள் படும் துயரங்களை மோடி அரசு கொஞ்சம் கூட கருணையுடன் அணுகவில்லை. ‘ஏன் நாட்டுக்காக இந்தக் கஷ்டத்தைக்கூட பொறுத்துக்கொள்ள மாட்டீர்களா?’, ‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் தேசத் துரோகிகள்’, ‘எல்லையில் நமது ராணுவ வீரர்கள் கடுங்குளிரில் நிற்கிறார்கள். உங்களால் ஒரு நாள் ஏடிஎம் முன் நிற்க முடியாதா?’ என்றெல்லாம் பா.ஜனதா ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக ரூபாய் நோட்டு தடையை எதிர்த்தவர்களை வசை பாடினர்.

ஒவ்வொரு நாளும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் புதுசு, புதுசாக அறிவிப்பை வெளியிட்டு மக்களை சுற்ற விட்டன. எதை பின்பற்றுவது?, இன்று எவ்வளவு பணம் எடுக்கலாம்? என விவரம் புரியாமல் மக்கள் குழம்பினர்.

நவம்பர் 8-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை ஒரு நபர் ரூ.4 ஆயிரம் வரையில்தான் எடுக்கலாம் என்ற மத்திய அரசு, அதன்பின் 14-ந்தேதி முதல் 17 ந்தேதி வரை அதை ரூ.4,500 ஆக உயர்த்தியது. பின் அந்த தொகையை ரூ.2 ஆயிரமாக குறைத்தது.

அதன்பின் நாள்தோறும் அறிவிப்புகளை பொருளாதாரச் செயலாளர் சக்தி கந்ததாசும், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலும் மாறி மாறி வெளியிட்டனர். வங்கிக் கணக்கில் இருந்து ஒருவருக்கு நாள்தோறும் ரூ.10 ஆயிரம், வாரத்துக்கு ரூ. 24 ஆயிரம் என கணக்கு வைத்து க்கொடுத்தது. திட்டமிடப்படாத ரூபாய் நோட்டு தடையால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிவிப்புகள் வந்து கொண்டே இருந்தன

ஓட்டுப்போடும் போது கையில் ‘மை’ வைத்த மக்களுக்கு, அவர்களின் பணத்தை எடுக்கவே கையில் ‘மை’ வைக்க உத்தரவிட்டது மத்திய அரசு.

செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.15.44 லட்சம் கோடியில், ரூ. 5 லட்சம் கோடி வரை வங்கிகளுக்கு திரும்பி வராது . அந்த அளவுக்கு நாட்டில் கறுப்புப் பணம் நிலவுகிறது. மீண்டும் புழக்கத்தில் வராத அந்தத் தொகையை மக்கள் நலனுக்குச் செலவிடலாம் என்று மத்திய அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இதே வாக்கு மூலத்தை உச்ச நீதிமன்றத்திலும் மத்திய அரசு தெரிவித்தது.

மோடி மக்களிடம் கேட்டுக்கொண்ட 50 நாட்களும் முடிந்தது. நாட்டில் ஊழலும் குறையவில்லை, கள்ள நோட்டுகளும், கருப்பு பணமும் தடுக்கப்படவில்லை, தீவிரவாத தாக்குதல்களும் நடக்கத்தான் செய்தன.

புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு அச்சடித்து வெளியிட்ட சில நாட்களிலேயே வங்காளதேச எல்லையிலும், மேற்குவங்காளத்திலும் ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

2 ஆயிரம் ரூபாயைப் பெற கால்கடுக்க, வரிசையில் மக்கள் காத்திருந்த வேளையில், நாள்தோறும் பெரும் பண முதலாளிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்த செய்தியை கேட்டு மக்கள் கொதித்தனர்.

2 ஆயிரம் ரூபாய்க்கு மக்கள் வங்கி வாசலுக்கும், ஏ.டி.எம்.க்கும் ஓடிக்கொண்டு இருக்கும் போது, கர்நாடகத்தில் பா.ஜனதா தலைவர் ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு ரூ. 600 கோடியில் ஆடம்பரமாக திருமணம் நடத்தினார்.

தமிழகத்தில் சேகர் ரெட்டி வீட்டில் ரூ.3 கோடிக்கு புதிய 2 ஆயிரம் நோட்டுகளும், தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் ரூ. 30 லட்சமும், சேலத்தில் பா.ஜனதா பிரமுகரிடம் ரூ.25 லட்சம் புதிய 2 ஆயிரம் நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன. ஆனால், இவர்கள் மீதான நடவடிக்கை அனைத்தும் அரசு தரப்பில் கண்துடைப்பாகவே இருந்தது. புதிய 2 ஆயிரம் நோட்டு அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து முறையான விளக்கம் இன்று வரை இல்லை.

இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் ரிசர்வ் வங்கி செல்லாத ரூபாய் நோட்டு குறித்து அறிக்கை ெவளியிட்டது.

அதில், வங்கிக்குள் 99 சதவீதம் அதாவது, ரூ.15.28 லட்சம் கோடி வரை வந்து விட்டது. வெறும் ரூ.16,000 கோடி மட்டுமே புழக்கத்தில் வரவில்லை. அதாவது, 1,000 ரூபாய் தாள்களில் சுமார் ரூ.8 ஆயிரத்து 900 கோடியும், 500 ரூபாய் தாள்களில் ரூ. 7 ஆயிரத்து 100 கோடியும் திரும்பி வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளில் 99 சதவீதம் நோட்டுகள் வந்துவிட்டன என்றது.

அப்படி என்றால், அனைத்து ரூபாய் நோட்டுகளும் வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டன என்றால், கறுப்பு பணம் என்ற கூறப்பட்ட ரூ. 5 லட்சம் கோடி எங்கே போனது? எதற்காக இந்த ரூபாய் நோட்டு தடை? என்ற கேள்விகள் எழுந்தன.

கள்ள நோட்டு ஒழிந்ததா?

ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவிப்பதன் மூலம், கள்ள நோட்டை ஒழிக்க முடியாது என்று பல பொருளாதார வல்லுநர்கள் முன்பே தெரிவித்தனர்.

நாட்டின் புழக்கத்தில் கள்ள நோட்டு என்பது வெறும் ரூ.400 கோடிதான் இருக்கும் என்கிற போது, அதை ஒழிக்கவா இவ்வளவு பெரிய நடவடிக்கை. ‘கொசுக்கு பயந்து வீட்டை கொளுத்திய’ கதையாக இருந்தது.

ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, செல்லாத ரூபாய் நோட்டுகளில் 1,000 ரூபாய் நோட்டுக்களில் கள்ள நோட்டு சுமார் ரூ.8.4 கோடி மட்டுமே. பழைய 500 ரூபாய் நோட்டுக்களில் ரூ.4.7 கோடிதான். ஆக, வெறும் ரூ.13.1 கோடி மட்டுமே கள்ள நோட்டுக்கள் இருந்துள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டில் 199 தாள்களும், 2,000 ரூபாய் நோட்டில் 638 தாள்களும் கள்ள நோட்டுக்கள் இருந்துள்ளன.

ரொக்கமில்லா பரிவர்த்தனை அவசியமா?

ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருந்தது தெரிந்தவுடன், மத்திய அரசு தனது நோக்கத்தை, செயல்பாடுகளை டிஜிட்டல் பரிமாற்றத்தின் பக்கம் திருப்பியது.

இந்தியா பணமில்லா பொருளாதாரமாக மாற வேண்டும். அனைவரும் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறுங்கள் என மத்திய அரசு அறிவுறுத்தி பல சலுகைகளை அள்ளி வீசியது.

ரூபாய் நோட்டு தடை காலத்தில் உச்சத்தில் இருந்த டிஜிட்டல் பரிமாற்றம் அதன்பின் பணப்புழக்கம் இயல்புக்கு வந்தவுடன் படிப்படையாகக் குறைந்தது.

வழக்குகள்

ரூபாய் நோட்டுதடைக்கு எதிராக எதிராக நாடெங்கிலும் உள்ள நீதிமன்றங்களில் ஏறக்குறைய 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன. இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து தற்போது உச்ச நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது.

ரூபாய் நோட்டு தடைக் காலமான டிசம்பர் 31-ந்தேதிக்குள் பணத்தை மாற்ற முடியாத வெளிநாடு வாழ் இந்தியர்களும், வெளிநாட்டுப் பயணம் சென்று இருந்தவர்களும் சிறப்பு வாய்ப்பு மூலம் மார்ச் 31-ந்தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என அரசு அறிவித்து. பின்னர் ரிசர்வ் வங்கி மூலம் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. இதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

வளர்ச்சியில் சரிவு

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு நாடு கொடுத்த விலை என்ன தெரியுமா? பொருளாதார வீழ்ச்சி, வேலை இழப்பு, சிறுதொழில்கள் முடக்கம், அமைப்புசாரா தொழில்கள் அழிப்பு, வறுமை பெருக்கம் ஆகியவைதான்.

நாடுமுழுவதும் 15 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்தது. ரூபாய் நோட்டு தடைக்கு பின் அடுத்த 4 மாதங்களுக்கு எந்த புதிய ஆர்டரும் கிடைக்கவில்லை என 73 சதவீத உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர் என இந்திய தொழில், வர்த்தகத்துறை கூட்டமைப்பு (எப்.ஐ.சி.சி.ஐ) தெரிவித்துள்ளது.

ரூபாய் நோட்டு நீக்க நடவடிக்கையின் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 2 சதவீதம் குறைந்து 5.7 சதவீதமாகச் சரிந்தது. இந்த இழப்பு என்பது பொருளாதாரத்தில் ரூ. 2 லட்சம் கோடியிலிருந்து ரூ. 2.5 லட்சம் கோடி வரை இருக்கும்.

ஒட்டுமொத்தத்தில் ரூபாய் நோட்டு தடை நடவடிக்கை என்பது நாட்டின் பொருளாதாரத்தை பின்னோக்கி இழுத்ததோடு, கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பைப் பறித்துட்டது.

லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. லஞ்சம், ஊழல் எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பதை சமீபத்தில் தேசிய, தமிழக அரசியலில் அரங்கேறிவரும் குதிரை பேரங்களிலிருந்து ெதரிந்து கொள்ளலாம்.

ரூபாய் நோட்டு தடையின் போது இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மார்ச் 13-ந்தேதியோடு நீக்கப்பட்டதால், மக்கள் ஒருவழியாக மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், அவர்களின் மகிழ்ச்சி அடுத்த 3 மாதங்களில் மீண்டும் முடிவுக்கு வந்தது. ஆம், ஜூலை 1-ந்தேதி இதேபோல் சரியாகத் திட்டமிடாமல் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு நள்ளிரவில் அறிமுகம் செய்தது.

மக்கள் அனுபவித்த துன்பம், காவு வாங்கிய உயிர்கள், காத்திருப்புகள் என எதுவுமே தெரியவில்லையா?....

மத்திய அரசு எப்போது தனது ரூபாய் நோட்டு தடை தோல்வியை ஒப்புக்கொள்ளப்போகிறதோ?.....