நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை பிரதமர் மோடி இஸ்ரோ மையத்தில் இருந்து பார்வையிட பெங்களூரு வந்திருந்தார். பிரதமருடன் இணைந்து இந்த நிகழ்வை பார்வையிட நாடு முழுவதும் இருந்து 60 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரோ சார்பாக நடத்தப்பட்ட போட்டியில் இருந்து இவர்கள் தேர்ந்தெடுக்க பட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் விக்ரம் லேண்டர் தரையிறங்க இருந்த இறுதி நொடிகளில் சிக்னல் கிடைக்காமல் போனதால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதுகுறித்து ஆய்வு நடந்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பிய பிரதமர் மோடி மாணவர்களுடன் உரையாடினார்.

ஒவ்வொருவரும் பிரதமரிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கிருந்த மாணவர் ஒருவர் பிரதமரிடம், " நான் நாட்டின் குடியரசு தலைவராக விருப்பப்படுகிறேன். அதற்கான வழிமுறைகள் என்ன?" என்று கேட்டார். அவரின் தோள்களை தட்டிக்கொடுத்து " ஏன் பிரதமராக விருப்பம் இல்லையா?" என்று மோடி கேட்டார்.

இந்த சம்பவத்தால் அந்த இடம் கலகலப்பாகியது.