மோடி அனைவரையும் விழுங்கும் ராட்சசன்: ஜே.டி.யு. எம்.எல்.ஏ. கோபால் மண்டல் சர்ச்சை பேச்சு
பீகார் மாநிலத்தின் கோபால்பூர் தொகுதி ஜேடியூ எம்எல்ஏ கோபால் மண்டல், மோடி அனைவரையும் விழுங்கக்கூடிய ராட்சசன் என்றும் வாஜ்வாய், அத்வானி போன்றவர்கள் அப்படி இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் பிரதமர் மோடியை ராட்சசனுடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தின் பகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கோபால் மண்டல் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு பேசியிருக்கிறார். இவரது பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
"பிரதமர் எனக்கு விரோதி இல்லை. ஆனால், மோடி ஒரு ராட்சசன். அனைவரையும் விழுங்கக்கூடியவன். வாஜ்வாய், அத்வானி போன்றவர்கள் அப்படி இருக்கவில்லை" என்று கோபால் மண்டல் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு ஒரு சனாதனத் திருநாள்! கலித்தொகையைச் சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் கருத்து!
மேலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். "நிதிஷ் குமாரை ஒருங்கிணைப்பாளராக மட்டும் ஆக்கினால் பலனில்லை. அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா கூட்டணி பாஜகவை எதிர்கொள்ள முடியும். இல்லையெனில் கூட்டணி கலைந்துவிடும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
"நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் நிதிஷ் குமாரை தெரியும்" என்று குறிப்பிட்டுள்ள கோபால், அவரை விட்டால் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக வரக்கூடிய தலைவர் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். அனைவரும் ஒன்றிணைந்து நிதிஷ்குமாரை பிரதமராக்குவோம் எனவும் பேசியிருக்கிறார்.
"மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமாகிவிடும்" என்று கூறியிருக்கும் கோபால் மண்டல், நிதீஷ் குமார் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக வரவில்லை என்றால், வேறு யார் சரியான தேர்வாக இருப்பார் என்றும் கூறினார். "பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை விட ராகுல் காந்தி சிறந்தவர்" என்று ஜேடியு எம்எல்ஏ கோபால் மண்டல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பற்றிய கோபால் மண்டலின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவினர், கோபால் மண்டல் இதுபோன்ற தகாத வார்த்தைகளை உதிர்ப்பதையே வழக்கமாகக் கொண்டவர் என்றும் பாஜகவைச் சேர்ந்த யாராவது இப்படிப் பேசியிருந்தால் எதிர்க்கட்சியின் அனைவரும் கண்டனம் தெரிவிப்பார்கள் என்றும் கூறிவருகின்றனர்.
எல்லாம் தெரிந்ததுபோல் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது ஆளுநரின் வாடிக்கை: அமைச்சர் ரகுபதி