ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரு. பிரணாப் முகார்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

கடந்த 8-ம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனிடையே ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதில் மத்திய அரசின் செயல்பாடுகள் தோல்வியடைந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினர். ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாடாளுமன்றம் 2வது நாளாக நேற்றும் முடங்கியது. அதே நேரத்தில், இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கையும், கண்டனமும் தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் குடியரசுத் தலைவரையும் சந்தித்து அவர்கள் முறையிட்டனர்.

இந்த பிரச்சினைகளுக்கு இடையே டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி நேற்று திடீரென சந்தித்து பேசினார். 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. இருவரும் எந்த பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து குடியரசு தலைவரிடம், மோடி விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.