ரொக்கமாக கொடுத்து ரூ. 2 லட்சத்துக்கு மேல் தங்க நகைகள் வாங்கினால், ஒரு சதவீதம் வரி ஏப்ரல் மாதம் முதல்தேதி முதல் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கருப்புபணம்
நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில் பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, இதற்கு முன் ரூ. 5 லட்சத்துக்கு மேல் வாங்கினால்தான் வரி என்பது ரூ.2 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்கநகைகள் என்பது பொதுப்பொருட்கள் பட்டியலுக்குள் கொண்டு வரப்பட்டு, வரி விதிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அறிவிப்பு
இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், “ வருமானவரிச் சட்டத்தின் படி, ரூ.2 லட்சத்துக்கு மேல், பொருட்கள், சேவைகள் வாங்கும் போது, ஏப்ரல் முதல் ஒரு சதவீதம் வரி விதிக்கப்படஉள்ளது.
இது இதற்கு முன் ரூ. 5 லட்சமாக இருந்தது. பொதுப்பொருட்கள் பட்டியலுக்குள் தங்க நகைகளும் கொண்டு வரப்பட்டுள்ளதால், அவற்றுக்கும் இது பொருந்தும்'' எனத் தெரிவித்தார்.
குறைப்பு
கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 1ந் தேதி மத்திய அரசு விடுத்த அறிவிப்பின்படி, ரொக்கமாக ரூ. 5 லட்சத்துக்கு அதிகமாக நகைகள் வாங்குவோர் ஒருசதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
கடந்த 5 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த நிலையில், அந்த அளவை ரூ.2லட்சமாக மோடி அரசு குறைத்துள்ளது.
5 ஆண்டுகளுக்குபின்
கடந்த 2016-17ம் ஆண்டு பட்ஜெட்டில், பொருட்கள், சேவைகளை ரொக்கமாக கொடுத்து ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக வாங்கும்போது ஒருசதவீதம் வரி விதிக்கப்படும் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டாலும், நகைகள் இதில் சேர்க்கப்படவில்லை. இப்போது தங்க நகைகளும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
நடுத்தர, கிராம மக்களுக்கு அடி
இதனால், கிராமமக்கள், நடுத்தரமக்கள் தங்களின் பிள்ளைகள் விசேஷம், மகள்,மகன் திருமணத்துக்காக குறைந்த அளவு நகை வாங்க விரும்புபவர்களுக்கு மத்திய அரசின் உத்தரவு பெரிய அடியாக அமைந்துள்ளது.
உதாரணமாக ஒருவர் தனது மகளின் திருமணத்துக்கு ரூ. 5 லட்சத்துக்கு மேல் நகை வாங்கும் போது ஒரு சதவீதம் அதாவது ரூ. 5 ஆயிரம் வரி செலுத்த வேண்டும்.
மேலும், சீர்வரிசைப் பாத்திரங்கள், பொருட்களையும் ரொக்கமாக ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக வாங்கினாலும் ஒரு சதவீதம் வரி செலுத்த வேண்டியது இருக்கும்.
ரூ.3லட்சத்துக்கு மேல்
அதுமட்டுமல்லாமல், அடுத்த நிதியாண்டு முதல் ரூ. 3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பரிமாற்றம் செய்யக்கூடாது அவ்வாறு செய்தால், அதே அளவு அல்லது 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவால், நகை வியாபாரம் மட்டுமின்றி, நகை வாங்கும் நடுத்தரமக்கள், கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
