தமிழ் திரைப்படத்தில் நடிகர் விவேக் நகைச்சுவையாகச் சொல்வார் “ ஏண்டா டே… லாரியில இருக்கிற ஆயிரம் ஸ்பேர் பார்ட்ச நம்ப மாட்டீங்க, இந்த 3 ரூபா எலுமிச்சம் பழத்தையாடா நம்புகிறீங்க. நீங்கெல்லாம் எப்படா திருந்தப் போறீங்க. உங்களை திருத்த இன்னொரு “தாடிக்காரர்” (பெரியார்) வரமாட்டார் ” என்று நகைச்சுவையாகக் கூறுவார்.
உலக நாடுகளின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவர், தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்துபவர், உற்சாகமாக அனைத்து தலைவர்களுடன் பழகுபவர், அதிரடி முடிவுகளை எடுப்பவர், சிறந்த பேச்சாளர் என்றெல்லாம் புகழப்படும் நம் பிரதமர் நரேந்திர மோடி, ராசி எண்ணை நம்பி செயல்படுகிறார், என்றால் நம்ப முடிகிறதா?
நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார் அமெரிக்காவின் புகழ்பெற்ற எண் கணித ஜோதிடர் பால் சோடோஸ்கி.

நியூயார்க்கின் பஃபலோ(buffalo) நகரில் பால் சோடோஸ்கி வசித்து வருகிறார். மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த காலத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியிட்டது வரை அனைத்தையும், மோடி, நியுமராலஜி அடிப்படையில்தான் செய்துள்ளார் என்கிறார்.
பிரதமர் மோடியின் நம்பிக்கைகள் குறித்து பால் சோடோஸ்கி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடியின் ஆதிக்க எண் 8. அதாவது அவரின் நியுமராலஜி எண் 8. அதனால்தான் மோடி, தான் பிரதமராகப் பொறுப்பேற்ற தேதியில் இருந்து, நாட்டையே உலுக்கி வரும் ரூ.1000, ரூ.500 நோட்டு தடை அறிவிப்பு வெளியிட்டது வரை அனைத்தையும் 8-ம் எண் ஆதிக்கத்தில் வருமாறு அமைத்து செயல்பட்டுள்ளார்.
புரியவில்லையா….
ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது நவம்பர் 8-ந்தேதி. அன்று இரவு தொலைக்காட்சியில் தோன்றி பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டபோது சரியாக மணி 8. அந்த 8 மணி அறிவிப்புதான், இந்தியர்களின் எதிர்காலத்தை, வாழ்க்கைத் தரத்தை மாற்றப்போகும் அறிவிப்பாக இருக்கும் என மோடி கூறி வருகிறார்.
பிரதமர் மோடிக்கும், 8-ம் எண்ணுக்கும் அப்படி என்ன தொடர்பு இருக்கு?.
பிரதமர் மோடி கடந்த 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி பிறந்தார். அவரின் பிறந்த தேதியை எண் கணித அடிப்படையில் கூட்டினால் கிடைப்பது நம்பர் 8. (1+7=8).
நரேந்திர மோடி என்ற பெயரில் 12 ஆங்கில எழுத்துக்கள் உள்ளன. நியுமராலஜியில் ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்கும் ஒவ்வொரு எண் உண்டு. அந்தவகையில், நரேந்திர மோடி(Narendra Modi) என்ற 12 ஆங்கில எழுத்துக்களின் கூட்டுத்தொகை 62. 6+2= 8. அதுவும் 8-ம் எண்ணில் முடிகிறது.
இது மட்டும் அல்ல. இன்னும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை ஆழமாக ஆய்வு செய்து பார்த்தால், 8-ம் எண்ணைச் சுற்றியே அவரின் செயல்பாடுகள் அமைந்திருக்கும்.
மோடியின் பிறந்த தேதி 17(1+7)=8. மோடி பிரதமராக பதவி ஏற்ற நாள் 2014, மே 26. (2+6)=8. பிரதமர் மோடி குஜராத் முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற்ற தேதி 2012, டிசம்பர் 26. அந்த தேதியின் கூட்டுத்தொகை (2+6)=8.
மோடி தேசிய அரசியலில் பிரவேசிக்க, தனது மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய தேதி 2014, மார்ச் 26. அந்த தேதியின் கூட்டுத் தொகை(2+6)=8. ஆகவே பிரதமர் மோடியின் முக்கிய முடிவுகள், பயணங்கள், செயல்பாடுகள் பெரும்பாலானவைகள் 8-ம் எண்ணைச் சுற்றியே அமைந்து இருக்கின்றன.
அதுமட்டுமல்ல, 8-ம் எண்ணுக்குரிய குணங்களும், பிரதமர் மோடியின் குணங்களும் சரியாக பொருந்தி வருகின்றன.
நியுமராலஜியில், 8-ம் எண்ணுக்குரிய குணாதிசயங்களாக “நடைமுறை வாழ்க்கையில் எதையும் அடைய கடினமாக உழைக்கும் குணம்”, “எப்போதும் தனது இருப்பை வெளிக்காட்டுவது”, “அதிகார வேட்கை”, “உயர்ந்த நிலை இலக்குகள்”, இந்த குணங்கள் அனைத்தும் பிரதமர் மோடியின் குணங்களோடு பெரும்பாலும் ஒத்துப்போகும்.

“நாம் நம்மை சிறப்பாக வெளிக்காட்டுவது”, “மேலாண்மை திறன்”, “நிர்வாகத்திறமை”, “வர்த்தகம்” அல்லது “நிர்வாகத்தில் சிறப்பான சாதனைகள் புரிதல்” ஆகியவற்றுக்கு 8-ம் எண் ஆதிக்கம் செயல்படும். இந்த குணங்களும் மோடிக்கும் பொருந்தும்.
கடந்த 2 மாதங்களுக்கு முன், பிரதமர் மோடி, டெல்லியில் பிரதமர் குடியிருக்கும் பகுதியான 7, `ரேஸ் கோர்ஸ் சாலை'யின் பெயரை மாற்றி, 7, “லோக் கல்யாண் மார்க்” என்று மாற்றினார்.
இந்த `லோக் கல்யாண் மார்க்' என்ற பெயர், மோடியின் பிறந்த எண்ணுக்கு ஒரு விதமான கூட்டுறவை, ஒத்துழைப்பை அளிக்கிறது. அதுதான் இந்த மாற்றம்.

இன்னும் பெரும்பாலானவர்களுக்கு ஏன் இந்த பெயர் மாற்றப்பட்டது என்ற விவரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
மிகப்பிரபலமான சால்டியன் காலண்டர்(கிரேக்கர்கள்) கணிப்பின்படி, பிரதமர் மோடி புதிதாக பெயர் மாற்றிய “லோக் கல்யாண் மார்க்” என்ற பெயரின் கூட்டுத்தொகை எண் 8. இதற்கு முன் இருந்த “ரேஸ் கோர்ஸ் சாலை” என்ற பெயரின் கூட்டுத் தொகை எண் 6.
அதனால், மோடி தனக்கு சாதகமாக இருக்கும் வகையில், தனது அதிகாரப்பூர்வ இல்லம் இருக்கும் பகுதியை “5, லோக் கல்யாண் மார்க்” என்றும், அலுவலகம் இருக்கும் பகுதியை “7, லோக் கல்யாண் மார்க்” என்றும் மாற்றியுள்ளார். இதில் நியுமராலஜி தவிர்த்து ‘வாஸ்து’, ‘பெங் சூயி’ ஆகிய சாஸ்திரங்கள்படியும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தீன் மூர்த்தி பவனிலும், அடுத்து வந்த லால் பகதூர் சாஸ்திரி 10, ஜன்பாத் பகுதியிலும் குடியிருந்தனர். அதன்பின் வந்த இந்திரா காந்தி, 1 சப்தர் ஜங் சாலைக்கு குடியேறினார்.
அதற்குப் பின் பிரதமர்களான ராஜீவ் காந்தி, வி.பி.சிங், தேவே கவுடா, ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகியோர் 7 ரேஸ் கோர்ஸ் சாலை என்ற முகவரியில்தான் குடியிருந்தனர்.
அவர்கள் அந்த பகுதியின் பெயரை ஒருபோதும் மாற்ற வேண்டும் என எண்ணியதில்லை. ஆனால், மோடிக்கு மட்டும் பெயர் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றக் காரணம் என்ன?.
தனது ஆதிக்க 8-ம் கூட்டுத்தொகையில் அமைய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என்று பால் சோடஸ்கி கூறுகிறார்.
மோடி பிரதமராக வந்தபின், அவரின் இரண்டரை ஆண்டுக் கால ஆட்சியில் பல முக்கிய திட்டங்கள் அனைத்தும் கூட்டுத்தொகை 8-ம் எண்ணில் வரும் தேதியிலேயே பெரும்பாலும் தொடங்கப்பட்டுள்ளன
ஏழை மக்களுக்கு ஓய்வூதிய திட்டமான “ஸ்வலம்பன் அபியான்” திட்டம் கடந்த 2014, செப்டம்பர் 17-ந் தேதி தொடங்கப்பட்டது. அந்த தேதியின் கூட்டுத்தொகை 8.(7+1=8).

முதல் முறையாக சார்க் மாநாட்டில் மோடி பேசும் தேதியும் அவருக்கு ஏற்றார்போல் மாற்றி அமைக்கப்பட்டது.
குஜராத்தில் கடந்த 2015-ம் ஆண்டு, ஜனவரி 8-ந்தேதி “பர்வாசி பாரதிய திவாஸ்” திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார்(8-ந்தேதி).
“பிரதான் மந்திரி முத்ரா” திட்டம் தொடங்கப்பட்டதும் கடந்த 2015, ஏப்ரல் 8 தேதி, விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட “தூர்தர்சன் கிசான் சேனல்” அர்பணிக்கப்பட்ட நாள் 2015, மே 26ந்தேதி(2+6=8).
மோடியின் மிகப்பிரபலமான “டிஜிட்டல் இந்தியா” திட்டம் 2015, செப்டம்பர் 26ந்தேதி(2+6=8) தொடங்கப்பட்டது.
ஆக, பிரதமர் மோடியின் பெரும்பாலான திட்டங்கள், அறிவிப்புகள், பயணங்கள் அனைத்தும் 8-ம் எண் ஆதிக்கத்தில் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. 8-ம் எண் எப்போதும் தன்னைச்சுற்றி இருக்குமாறு அமைத்துக்கொண்டு வருகிறார் பிரதமர் மோடி, என்பது தெளிவாகத் தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடி எப்போதும், பொது மேடைகளில் மூடநம்பிக்கைகள், நம்பிக்கைகள் குறித்து குறை சொல்லியதோ, அல்லது தாழ்த்திப்பேசியதோ இல்லை என்பதை கவனித்திருந்திருக்கிறீர்களா.
சமீபத்தில், இந்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தபோதுகூட தான் ஒருபோதும் தனது எதிர்காலம் குறித்து ஜோதிடர்களிடம் கேட்டது கிடையாது என்று மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் வாழ்க்கை பாதை முழுவதும் நியுமராலஜி, மத நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றின் மூலம்தான் அமைந்திருக்கிறது என்று கூறிவிடமுடியாது. அதேசமயம், அவரின் பெரும்பாலான முடிவுகள், திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட எண் ஆதிக்கத்தில் வரும்போது, விமர்சனங்கள் எழுவது இயல்புதான்.
எல்லாம் சரி மிஸ்டர் மோடிஜி… கடந்த நவம்பர் 8-ந்தேதி அன்று, இரவு 8 மணிக்கு அந்த ராசியான 8-ம் எண் ஆதிக்கத்தில் நாட்டின் வளமான, ஒளிமயமான எதிர்காலத்துக்காக ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பை வெளியிட்டீர்கள்.
நீங்கள் விடுத்த அறிவிப்பால் மக்களின் எதிர்காலம், நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் தானே….
-போத்தி ராஜ்
