ரூபாய் நோட்டு விவகாரத்தில் உண்மையை எதிர்கொள்ள வெட்கப்பட்டு பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வருவதைத் தவிர்ப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த சில தினங்களாக முடங்கி வருகின்றன. பிரதமர் மோடி நேரடியாக பதிலளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. இதனால் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் முடங்கின.

காங்கிரஸ் பேரணி

இந்நிலையில் ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் பேரணி நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை காங்கிரஸ் துணைத் தலைவருமான ஆனந்த் சர்மா பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி நாட்டுக்கு மிகப் பெரிய அநீதியை இழைத்து விட்டார். மிகப் பெரிய முடிவை எடுப்பதற்கு முன் எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் உலக அளவில் இந்தியாவின் பெயர் கெட்டுள்ளது.

விசாரணை தேவை

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதில் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. சாதாரண மக்களுக்கு இன்னல்கள் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு வலியுறுத்தி வருகிறோம். அது நடக்கும்வரை காங்கிரசின் போராட்டம் தொடரும்.

விவசாயிகள், சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மோடி அரசின் அறிவிக்கப்படாத பொருளாதார அவசர நிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மை வைத்து அவமதிக்கும் மோடி

பணத்தை மாற்ற வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு மை வைக்கப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாங்கள் வைத்திருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்குச் செல்லும் போது அவர்களுக்கும் மை வைக்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய மக்களை மட்டுமல்லாமல் வெளிநாட்டினரையும் மோடி அரசு அவமதித்து வருகிறது.

தங்கள் சொந்த பணத்தை மக்கள் பயன்படுத்துவதற்கு மை வைக்கும் ஒரே அரசு மோடி அரசுதான். வேறு எந்த அரசும் இதுபோன்ற நிலைக்கு சென்றதில்லை.

இவையெல்லாம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் தயாரா?. எங்களது கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் கேட்டு பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

உண்மையை எதிர்கொள்ள கூச்சம்

ஆனால் ஆளும் தரப்பினரோ பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்தில்தான் உள்ளார் என்றும் ஆனால் அவர் விவாதிக்க வரமாட்டார் என்றும் கூறுகின்றனர்.

இது என்ன நிலைப்பாடு என்று தெரியவில்லை. உண்மையை எதிர்கொள்ள வெட்கப்பட்டு பிரதமர் மோடி நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்க தயங்குகிறார்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி போராட வேண்டும். இவ்வாறு ஆனந்த் சர்மா பேசினார்.

கைதாகி விடுதலை

அதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லி ரெய்சினா சாலையில் உள்ள இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.