மோடி ஆட்சி முடிவுக்கு வரும் காலம் நெருங்கி வருகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார். 

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மம்தா பேசியதாவது: மோடி ஆட்சியில் ஜனநாயகம் இல்லை. ஒன்றுபட்ட இந்தியாவுக்கு உதாரணம்தான் கொல்கத்தா பொதுக்கூட்டம். தம்மைத்தவிர மற்றவர்கள் யாருக்கும் நேர்மை இல்லை என்று மோடி பேசிவருவது வேடிக்கையாக உள்ளது. 5 ஆண்டுகளில் நாட்டையே பாஜக கொள்ளையடித்து விட்டது. பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. 

மோடியின் ஆட்சி காலாவதியாகும் நேரம் நெருங்கி விட்டது. மோடி அரசு வருமான வரித்துறை, சிபிஐ., ஆகியவற்றின் நிர்வாகத்தை அழிப்பதன் மூலம் ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் சீரழிந்து விட்டது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகிவிட்டது. மத்திய அரசு அனைத்து வரம்பு மீறலையும் செய்து வருகிறது. மோடியை போல் ஒரு தலைவர் இனி தேவையில்லை. 

மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம். ரிசர்வ் வங்கி உட்பட பல அமைப்புகளின் மரியாதையை மோடி அரசு அழித்துவிட்டது. மோடி அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது. டெல்லி, உத்தரபிரதேசம், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது என கூறினார்.